மகாகவியின் மனம் வெளுத்த முத்துமாரியம்மன்
புதுச்சேரி முத்துமாரியம்மன் கோயிலின் தலவரலாறு மற்றும் சிறப்புகள்..

மகாகவி பாரதியாரின் கவிதைகள் தேச விடுதலைக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும் வித்திட்டவை. அந்த வகையில் முத்துமாரியம்மன் மீது அவர் பாடிய பாடலும் புகழ்பெற்றது.
"மணி வெளுக்கச் சாணையுண்டு எங்கள் முத்து மாரியம்மா! எங்கள் முத்துமாரி!
மனம் வெளுக்க வழியில்லை எங்கள் முத்து மாரியம்மா! எங்கள் முத்துமாரி!' என்ற பாடலைப் பாடி , தன் மனம் வெளுக்க வரம் பெற்றவர் நம் மகாகவி பாரதியார்.
இவர் வேண்டிக் கொண்ட தெய்வம், புதுச்சேரியில் எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, புதுச்சேரியின் வடகிழக்கில் அடர்ந்த வனப்பகுதியில் சிறிய குளம் இருந்தது. அதன் ஓரத்தில் அப்பகுதி வாழ் கிராம மக்கள் கிராம தேவதையாக மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் ஆகிய சுதையினால் ஆன தெய்வச் சிலைகளை அமைத்து வணங்கி வந்தனர். அதன் அருகிலுள்ள வேப்ப மரத்தில் நாகம் ஒன்று வெளிப்பட்டது.
அதைக் கண்டு அஞ்சிய பக்தர்களிடம், ""உங்களுக்கு நான் எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன். என்னை வழிபடும் உங்கள் அனைவரையும் நான் காத்தருள்வேன்'' என சத்தியம் செய்தது. பின்னர் மக்கள் ஒன்றுசேர்ந்து வேப்பமரத்தின் அடியில் இருந்த கல்லை எடுத்து, அதையே அம்மனாக வைத்து வழிபட்டு வந்தனர். அந்த இடத்தில் பிற்காலத்தில் உருவானதுதான் இந்த முத்துமாரியம்மன் கோயில்.
அக்காலத்தில் பல சமுதாய மக்கள் வாழ்ந்து வந்த இப்பகுதியில் அவர்களுக்கு காவல் தெய்வங்களாக மதுரைவீரன், பாவாடைராயன், வீரமாகாளி எனும் அங்காளம்மன் ஆகியோர் விளங்கினர். இதில் அங்காளம்மனே சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெயர் மாற்றம் பெற்று, முத்துமாரியம்மன் என்று வணங்கப்பட்டு வருகின்றாள் என தலவரலாறு கூறுகின்றது.
வடக்கு நோக்கி உயரமான ராஜகோபுரம் காட்சி தருகின்றது. உள்ளே நுழைந்ததும் பழைமையான வேப்ப மரம் காணப்படுகின்றது. அதன் கிழக்குப் பகுதியில் நாக வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மேற்கே இரண்டு கற்கள் உள்ளன. இவையே முதன்முதலில் வழிபாட்டில் இருந்த பழைமையான தெய்வ வடிவங்கள் எனக் கூறப்படுகின்றது.
மேலும் இவ்வாலயத்தில் வேம்படி விநாயகர், பேச்சாயி அம்மன், துர்கை, ஐயப்பன், காத்தவராயன் சந்நிதிகள், ராகவேந்திரர் பஜனை மடம், பிருந்தாவனம் அமைந்துள்ளன.
அம்மன் சந்நிதிக்கு எதிரில் முன்மண்டபத்தில் பச்சை வாழியம்மன், பாவாடைராயன், ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன.
மீனவகுலத் தெய்வமாகப் போற்றப்படுகின்றார், பேச்சாயி அம்மன். பார்வதியின் அம்சமான இவள் மகப்பேறு அருளும் அன்னையாக வணங்கப்பட்டு வருகின்றார். பேச்சு சரியாக வராத குழந்தைகள் பேச்சாயி அம்மனிடம் வேண்டிக் கொண்டு பலன்பெறுகின்றனர். தென் கிழக்கு மூலையில் மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சுதை வடிவில் பிரம்மாண்டமாகக் காட்சிதருகின்றனர்.
இவ்வாலயத்தில் கி.பி. 1795}இல் செய்யப்பட்ட அம்மனின் தொன்மையான செப்புத் திருமேனி உள்ளது. இது தவிர விநாயகர், ஐயப்பன், ராகவேந்திரர் செப்புத் திருமேனிகளும் உள்ளன.
நுழைவாயிலில் வல்லபை கணபதியும், பாலகுமரனும் காட்சி தருகின்றனர். ஆலயத்தின் நடுநாயகமாக அமர்ந்த கோலத்தில் இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டபடி காட்சி தருகின்றார் முத்துமாரியம்மன். அன்னையின் வலது மேற்கரத்தில் டமருகம், இடது மேற்கரத்தில் திரிசூலம் இருக்க, வலது கீழ்க்கரம் வாளேந்தியும், இடது கீழ்க்கரம் கபாலம் தாங்கியும் காட்சி தருகின்றன. அன்னையின் திருமுகம் அழகு மிளிர்ந்து காணப்படுகிறது. அன்னையின் திருவாயின் ஓரத்தில் இரண்டு பக்கங்களிலும் கோரைப்பற்கள் காணப்படுகின்றன.
சூலம், பலிபீடம் , கொடிமரத்தை அடுத்து அன்னையை நோக்கியவாறு காத்தவராயன் காட்சி தருகின்றார்.
இந்த ஆலயத்தின் அருகில் வசித்து வந்த பாரதியார், முத்து மாரியம்மனை அவ்வப்போது வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த அம்மனிடம் அவர் பாடிய "அருள்முத்துமாரிப்பாட்டு' மிகவும் பிரசித்தி பெற்றது.
தரிசனத்துக்காக காலை 7 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரையும் திறந்திருக்கும் இந்த ஆலயம், புதுச்சேரி நகரில் முத்துமாரியம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

