ஓஷோ சொற்பொழிவுகளில் கேட்ட ஒரு கதை, 'உடனடியாக வந்துவிடாதே ஆனந்தா' என்பது. வனத்தில் பயணம் மேற்கொண்டிருந்த புத்தருக்கு ஒருநாள் திடீரென்று தாகமெடுக்கிறது. உடனே அவர் தன்னுடனே பயணித்து வந்த சீடர் ஆனந்தரை அருகில் அழைத்து, 'சில மைல் தொலைவில் ஒரு நீரோடை உள்ளது. அங்கே போய்க் குடிக்கக்
கொஞ்சம் தண்ணீர் எடுத்துவா' என்கிறார்.
ஆனந்தரும் அந்த நீரோடையைத் தேடிக் கொண்டு போகிறார்.
புத்தர் சொன்னதுபோல அங்கே அந்த நீரோடை தென்படுகிறது. ஆனால், நீரோடையில் இருக்கும் தண்ணீர் குடிக்கும் நிலையில் இல்லை. சற்றுமுன் அந்த நீரோடையில் இறங்கிய மாட்டு வண்டியால் கலங்கியிருக்கிறது. ஓடையினடியில் இருந்த சேறும் இலைகளும் மேலெழும்பியுள்ளன.
அழுக்கு நீரை எப்படிப் புத்தருக்கு எடுத்துக்கொண்டு போவது என யோசித்த ஆனந்தர், வெறுங்கையுடன் திரும்புகிறார்.
நீர் எடுத்துவர முடியாமைக்கான காரணத்தையும் சூழலையும் புத்தரிடம் பகிர்ந்துவிட்டு, 'கொஞ்சம் பொறுங்கள்; இன்னும் சில மைல் தொலைவில் ஒரு பெரிய நதி இருக்கிறது. அங்கே இருந்து நீரைக் கொண்டுவருகிறேன்' என்கிறார்.
புத்தரோ 'அதெல்லாம் தேவையில்லை.
ஏற்கெனவே தென்பட்ட நீரோடையிலேயே நீரை எடுத்து வா' என்கிறார்.
ஆனந்தருக்கு அதில் பெரிய ஆர்வமில்லை என்றாலும், புத்தரின் சொல்லை மறுக்க முடியாமல் அதே நீரோடைக்குப் போகிறார். அப்போதும் நீர் குடிக்கும் நிலையில் இல்லை. மறுபடியும் வந்துவிடுகிறார்.
இரண்டாம் முறை திரும்பிய ஆனந்தரைப் பார்த்த புத்தர், மெல்லச் சிரித்தபடி, 'குடிக்கும் நிலையில் நீர் இல்லையெனில் அது எப்போது நன்னிலைக்கு வருகிறதோ அதுவரை கரையிலேயே காத்திரு' என்கிறார்.
ஆனந்தருக்கு அந்த வார்த்தைகள் முதலில் புரியவில்லை. ஆனாலும், புத்தரின் சொற்களைத் தட்ட முடியாமல் மீண்டும் அதே நீரோடைக்குப் போகிறார்.
அதன் கரையிலேயே வெகுநேரம் அமர்ந்திருக்கிறார். அமர்ந்திருக்கிறார் என்பதைவிடக் காத்திருக்கிறார். ஓடை தெளியும்வரை விழிப்புடன் நீரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.
நிதானமாக நீர் தெளிகிறது. வெண்ணிறப் படிவம் மேலெழுகிறது. அதுவரை ஆனந்தர் பார்த்த நீரோடையாக அல்லாமல் புதுவிதமாகத் தோன்றுகிறது.
நீரின் ஓட்டத்தை உற்றுப் பார்த்த ஆனந்தருக்கு ஏதோ ஒன்று பிடிபடுகிறது. மனத்தின் குழப்பங்கள் தெளிய வேண்டுமானால் காத்திருக்க வேண்டும். கலங்கிப் பின் தெளியும் மனமே விழிப்புணர்வை எட்டுகிறது.
மகிழ்ச்சியுடன் நீரை எடுத்து வந்த ஆனந்தர் புத்தரிடம், 'என் தாகமும் கொஞ்சம் தீர்ந்தது போல் இருக்கிறது' என்கிறார்.
அதற்குப் புத்தர், 'எதையும் அதன் போக்கிலேயே விட்டுவிட்டு நாம் மனத்தின் கரையில் அமர்ந்திருந்தால் போதும். அதற்கு எந்த ஆற்றலையும் செலவழிக்க வேண்டியதில்லை. உண்மையை உற்றுக் கவனிப்பதே தியானம். கடந்துசெல்வதே கலையின் ஞானம்' என்கிறார்.
தன் தாகத்துடன் இன்னொருவரின் தாகத்தையும் தீர்க்கவே புத்தர் எண்ணியிருக்கிறார். இடக் காலை வைக்கும்போது இருக்கும் ஓடை, வலக் காலை வைக்கும்போது இருப்பதில்லை. தெளிதலே மனத்தின் கலங்கலை மாற்றியமைக்கும். மாசுபடிந்த கங்கையின் தூய்மைக்காக உயிரை நீத்த நிகமானந்தாவைப் பற்றிய எண்ணங்கள் ஊடுருவும் போதெல்லாம்
'கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தெளிந்து, நலம் பெற்றாள்'
என்ற கலித்தொகை (142) பாடலும் நினைவிற்கு வந்துவிடும்.
நல்லந்துவனார் எழுதிய அப்பாடலில் கலங்கிய நீரை, தெளியவைக்கும் தேற்றாங் கொட்டையைப் பற்றிய குறிப்பு வருகிறது.
முழுப்பாடலுமே சுவைமிக்கது. எனினும், குறிப்பிட்ட வரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. பாடலின் பொருள், 'இருவரும் ஒருமித்த அன்பில் கலந்தவர்கள். ஆனாலும், ஊர்மக்கள் அவர்கள் இருவரையும் திருமணத்துக்குப் பிறகே கூடுதலாகப் புரிந்துகொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


