சுவர்ணபூமி தாய்லாந்து
தாய்லாந்து என்பதற்கு 'சுதந்திரமானவர்கள் நாடு' என்று 'தாய்' மொழியில் பொருள்.
முனைவர் ஜி குமார்
தாய்லாந்து என்பதற்கு 'சுதந்திரமானவர்கள் நாடு' என்று 'தாய்' மொழியில் பொருள். தாய்லாந்து நாட்டை முதலில் 'சியாம்' என்ற பெயரிலும் அழைத்து வந்தனர். கிழக்காசிய நாடுகளில் காலனி ஆதிக்கத்தின் கீழ் வராத ஒரே நாடான இங்கு இன்றும் அரச குடும்பமே ஆட்சி நடத்துகிறது. உலகின் பத்தில் ஒரு பங்கு விலங்குகள் தாய்லாந்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. சின்னஞ்சிறு மீன் இனத்திலிருந்து ராட்சதப் பல்லிகள் வரை நிறைந்திருக்கின்றன. பூனைகள் நிறைந்திருக்கின்றன. குரங்கு
களுக்கும் ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகிறது.
372 கி.மீ. நீளமுடைய முக்கிய நதியான 'சா ப்ரயா' நதியானது 'மே நாம்' என்று அழைக்கப்படுகிறது. 'மே' என்பதற்கு அம்மா அல்லது அன்னை என்றும், 'நாம்' என்பதற்கு நதி அல்லது நீர் என்றும் பொருள். தலைநகர் பாங்காக்கின் முக்கியப் பகுதிகள் நதி 'சா ப்ரயா'வின் இரு கரைகளிலுமே அமைந்துள்ளன.
ஆன்மிக நாடு
தாய்லாந்து பல்வேறு கலாசாரங்களையும், மத வழிபாடுகளையும் ஆதரிக்கும் நாடு. 'வாட்' என்பது ஆலயம் அல்லது மடாலயங்களைக் குறிக்கும். நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 95 % மக்கள் தேராவாடா புத்த மதத்தினர். உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம் இருக்கும் நாடு தாய்லாந்து. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் இங்கு புத்தமதம் பரவியது. சுமார் 42 ஆயிரம் புத்த ஆலயங்கள் இங்குள்ளன.
ஒவ்வொரு ஆணும் தனது இருபது வயதுக்கு முன் சிலகாலம் புத்த பிட்சுவாக இருக்கவேண்டும் என்பது இங்குள்ள நடைமுறை. எனவே எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் சாந்தமான குணம், கருணை ஆகியன மக்களை ஆக்கிரமித்திருக்கிறது. புத்த பிக்குகள் மிகுந்திருப்பதால், 'மஞ்சள் ஆடை அணிந்தவர்கள் நாடு' என்றே தாய்லாந்துக்குப் பெயர் சூட்டியிருக்கின்றனர்.
வியத்நாம், லாவோஸ், கம்போடியா, லங்கா நாடுகளின் ஆலயக் கட்டமைப்புகளைப் போன்றே இங்குள்ள புத்த ஆலயங்கள் உயரமான தங்க ஸ்தூபிகளுடன் பெரும்பாலும் காணப்படுகின்றன.
அரசியலிலிருந்து மதம் பிரிக்கப்பட்டிருந்தாலும் தாய்லாந்தில் அரசர் புத்தமதத்தை ஆதரிப்பவராகவே சித்திரிக்கப்படுகிறார்.
தாய்லாந்து முற்காலத்தில் 'சுவர்ண பூமி' என்ற பரப்பளவில் ஒரு பகுதியாக இருந்தது. வால்மிகி ராமாயணத்திலும் சுவர்ணபூமி பற்றிய குறிப்பு உள்ளது. பாங்காக்
சர்வதேச விமானதளம் 'சுவர்ணபூமி விமானதளம்' என்றே அழைக்கப்படுகிறது. இராமகிரிதி அல்லது இராமகியன் என்று ராமாயணமானது அழைக்கப்படுகிறது. புத்த ஆலயங்களிலும் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாக உள்ளன. கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆண்ட மன்னர்கள் தத்தம் பெயருடன் 'ராம' என்ற பட்டத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர். பாங்காக் நகரில் 100 புத்த ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றின் முக்கியமான ஆலயங்களை அறிவோம்.
வாட் அருண்
அருணோதய ஆலயம் அல்லது உதய ஆலயம் எனலாம். 'சா ப்ரயா' நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையில் திறக்கும்.
கோபுரம் சின்னஞ்சிறு சீனப் பீங்கான் துகள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றபடி அதிகாலையில் சூரியனின் முதல் ஒளி ஆலயத்தில் பட்டு பல வண்ணங்களில் தெறிக்கிறது. வாட்
அருண் மூல கோபுரம் சுமார் 70 மீட்டர் உயரம் உள்ளது. கோபுர உச்சியில் சூலம் போன்ற அமைப்பானது ஏழு முனைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உட்புறமாகச் சென்று பாங்காக் நகரின் அழகை ரசிக்கலாம். இதன் வடிவத்தை 19-ஆம் நூற்றாண்டில் நேர்த்தியாக வடிவமைத்தவர் அரசர் மூன்றாம் ராமா. மூல கோபுரத்தைச் சுற்றி நான்கு சிறிய கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சுவர்களில் புத்தரின் உருவங்கள் வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன.
வாட் ஃபோ
போதிமரத்து புத்தர் அல்லது சாய்ந்திருக்கும் புத்தர் என அழைக்கப்படும் இவர்தான் உலகின் மிக நீண்ட, அழகிய புத்தர் . சுமார் 46 மீட்டர் நீளத்தில் உள்ள இந்த புத்தர் சிலை தங்கத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. சிலையின் உயரம் 15 மீ. ஆகும். புத்தரின் பாதங்கள் ரேகைகளுடன் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. பிரகாரத்தில் 108 பித்தளைக் கிண்ணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை புத்தரது 108 பண்புகளை எடுத்துக்காட்டுவதாக ஒரு நம்பிக்கை. சுவரோவியங்களில் புத்தர் போதனைகளையும் ராமாயணத்தின் சில காட்சிகளையும் காணலாம்.
தாய் மசாஜ் அக்குபிரஷர், அயுர்வேத சிகிச்சை, யோகாசனங்கள் முறைகளை தன்னகத்தே கொண்ட வாட் ஃபோ மடாலயம் சிகிச்சைகளையும் அளிக்கிறது. இந்த மடாலயம் பல பள்ளிக்கூடங்களின் தாயகம் எனலாம்.
வாட் ஃப்ரா கைவ் ள எமரால்ட் புத்தர்
தாய்லாந்து நாட்டின் அரசரின் அரண்மனைக்கு அருகில் உள்ள இந்த ஆலயத்தில் அடர்ந்த பச்சைக் கல்லால் வடிக்கப்பட்டுள்ள விக்கிரகம் உள்ளது. ஒரே கல்லில் வடிக்கப்பட்ட விக்கிரகம் ஆழ்ந்த ஞானத்தில் இருப்பதுபோல் உள்ளது. அரசரை தவிர எவரும் விக்கிரகத்தைத் தொட முடியாது. அரசர் மட்டுமே விக்கிரகத்தின் மேலங்கியை கோடை, குளிர், மழைக்காலம் ஆகிய மூன்று பருவங்களில் மாற்றுகிறார்.
15-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆலய வளாகத்தில் தாய்லாந்து நாட்டின் முந்தைய அரசர்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அங்கோர் வாட் ஆலயத்தின் மாதிரி ஒன்று இங்கு வைக்கப்பட்டுள்ளது. சுவரோவியங்களில் ராமாயணத்தின் வெவ்வேறு காட்சிகளையும் காணலாம்.
மகா மாரியம்மன் கோயில்
மும்மூர்த்திகளைத் தவிர லட்சுமி, விநாயகர், இந்திரன், மாரியம்மன் ஆகிய கோயில்களும் இங்குண்டு. அவற்றில் முக்கியமான மகா மாரியம்மன் கோயில், 'வாட் கைக்' என அழைக்கப்படுகிறது. 1879-ஆம் ஆண்டில் தென்னிந்திய முறைப்படி நிறுவப்பட்ட இந்தக் கோயிலை புலம்
பெயர்ந்த தமிழர்கள் கட்டினர். மாரியம்மன் இங்கு உமாதேவி என்று அழைக்கப்படுகிறாள். விநாயகர், முருகன் சந்நிதிகள் உண்டு. வைத்தி என்பவர் கோயில் கட்டுமானப் பணிக்கு உதவியதால், கோயில் அமைந்த வீதியும் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

