
புத்தர் சிலை உணர்த்தும் தத்துவம்!
வழிபடுவோரின் மன சாந்திக்கும், வாழ்வில் வெற்றிக்கும், பல செல்வங்களையும் அடையவும் வழிவகுப்பவை புத்த தரிசனம்.
வழிபடுவோரின் மன சாந்திக்கும், வாழ்வில் வெற்றிக்கும், பல செல்வங்களையும் அடையவும் வழிவகுப்பவை புத்த தரிசனம். பிரம்மாண்டமான சிலைகளில் புத்தர் சிலைகளுக்கெனத் தனி முக்கியத்துவமும், தத்துவமும் உண்டு.
இவை அவரை மனதில் நிலைநிறுத்துவதோடு, போதனைகளை நினைவூட்டி வழிபடுவோரின் படைப்பாற்றலை மேம்படுத்தி, ஆன்மிகச் சிகரத்தில் ஏற்ற வல்லவை. இவற்றில் இருக்கும் கலைவண்ணம் சாதி, மதங்கள் பேதமின்றி அனைவரையும் ஈர்க்கிறது.
பெரும்பாலான இடங்களில் உள்ள சிலைகளில் புத்தர் தாமரை ஆசனத்தில் கால்களை குறுக்காக ஒன்றின் மேல் ஒன்று வைத்து அமர்ந்திருப்பார். இந்த நிலையில்தான் அவர் உபதேசங்களை அளித்ததோடு, நிர்வாணத்தையும் அடைந்தார். இது உடலின் சமநிலையை உறுதிப்படுத்துவதோடு, அனைத்துப் புலன்களையும் அடக்க வழி வகுக்கிறது. 'சமாதி நிலை' எனப்படும் ஆழ்நிலை தியானத்தின் மூலம் அடையும் சித்தியை இதன் மூலம் அடையலாம்.
'வீராசனம்' எனப்படும் நிலையில் வலது கால் இடது தொடைப்பக்கமும், இடது கால் வலது தொடைப்பக்கமும் இருக்கும். தேரவாத புத்த சமயத்தில் வீராசனமும், மஹாயான புத்த சமயத்தில் பத்மாசனமும் கடைப்பிடிக்கப்படுகிறது. அமர்ந்த நிலையில் அவர் பல முத்திரைகளைக் காண்பிப்பதையும் பல புத்தர் சிலைகள் சித்திரிக்கின்றன.
நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலைகள், அவரது இரு கால்களும் பூமியில் மிக்க உறுதியுடன் நிற்பதையும், தியானத்திலிருந்து எழுந்து ஊனக் கண்களினாலும் ஞானக் கண்களினாலும் உலகைப் பார்ப்பதையும் பார்க்கலாம். இது முக்தியை அடைய உதவும் கருணா நிலை என்பதோடு, வழிபடுவோருக்கு வரும் அபாயத்தைப் போக்கும்.
ஒரு காலை முன் வைத்து நடக்கும் நிலையில் உள்ள புத்தர் சிலைகள், தாய்லாந்தில் 13-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டன. அவர் நடந்துவரும் நிலையில், திருவோட்டுடன் மக்களிடம் ஆன்மிக உணர்வைத் தட்டி எழுப்பி, பிக்ûக்ஷ கேட்டு வாங்கியதை இவை குறிக்கின்றன.
சயனக் கோலத்தில் இருக்கும் புத்தர் சிலைகளில், எப்போதுமே வலது பக்கமாகப் படுத்திருப்பார். அவரது கையின் மீது தலை இருக்கும். இது அவரது இறுதிக் கால நிலையைச் சித்திரிப்பதாகும். புத்தரின் சிலைகள் காண்பிக்கும் முத்திரைகள் ஏராளமான ரகசியங்களை விளக்குபவையாகும். இவற்றை புத்தமத நூல்களில் அறியலாம்.
புத்த கயா
பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் கயையில் உள்ள புத்தரின் சிலை, தியானத்தில் தாமரையில் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்ட கல் சிலையாகும். 1989-ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சிலையானது 64 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது.
ஹைதராபாத் புத்தர் சிலை
ஹைதராபாத்தில் உசேன் சாகர் ஏரியின் நடுவில் உள்ள ஜிப்ரால்டர் பாறையின் மீது 58 அடி உயரத்துடன் ஒற்றைக்கல் சிலையாக அபயமுத்திரையுடன் புத்தர் காட்சியளிக்கிறார். இந்தச் சிலை 1992-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
ஸ்பிரிங் ஆலயம்
சீனாவில் ஹெனானில் உள்ள லுஷான் என்ற இடத்தில் ஸ்பிரிங் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள ஃபோடுஷான் மலையில், 2008-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட 420 அடி உயர புத்தர் சிலை உள்ளது. இது 66 அடி பீடத்தில் அமைந்துள்ளது. நூறு கிலோ தங்கம், 3300 டன் தாமிரக் கலவை, 1500 டன் எஃகு உள்ளிட்டவை கொண்ட இந்தச் சிலையானது, அமெரிக்காவில் உள்ள லிபர்டி சிலையைப் போல இரு மடங்கு உயரமுடையது.
உலகின் அதிக உயரமுடைய சிலை என்ற பெருமையை முன்பு பெற்றிருந்தது. 2018-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட 597 அடி உயரமுள்ள வல்லபபாய் படேலின் சிலை இப்போது அதிக உயரமான சிலை என்ற பெயரைப் பெற்று முதலிடத்தை வகிக்கிறது.
மோனிவா
மியான்மரில் மோனிவா என்ற இடத்தில் 380 அடி உயரத்தில் நின்ற நிலையில் இருக்கும் புத்தர் கற்சிலை 2008-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கடுத்து சயனக் கோலத்தில் உள்ள சிலை 295 அடி நீளம் உள்ளது. இந்தச் சிலையானது 1991-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
லேக்யுன் செக்யா
மியான்மரில் மோனிவாவில் 381 அடி உயரத்தில் நின்ற நிலையில் புத்தர் காட்சியளிக்கிறார். இவர் வெண்கலத்தால் உருவானவர். இதைச் சுற்றி பல்வேறு சிலைகளும் அழகிய தோட்டங்களும் உள்ளன. 2008-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
உஷிகு டைபுட்ஸூ
ஜப்பானில் உஷிகு என்ற இடத்தில் 1993-ஆம் ஆண்டில் 394 அடி உயர புத்தர் சிலை நிறுவப்பட்டது. அருகே உட்கார்ந்திருக்கும் நிலையில் அமிதாப புத்தர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
ப்ர புத்தா
தாய்லாந்தில் ஆங் தாங்கில் உள்ள வாட் முவாங் ஆலயத்தில் 72 அடி உயர ப்ர புத்தா சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த வெண்கலச் சிலை மீது தங்க முலாம் பூசப்பட்டு ஜொலிக்கிறது. புத்தர் இரு கைகளையும் இணைத்து அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் சிலை இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






