தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

பக்தனின் பசியாற்றிய பராசக்தி!

பசித்த பக்தருக்குச் சர்க்கரைப் பொங்கலும் அன்னபிரசாதமும் அருளி கருணை வெளிப்படுத்திய பராசக்தியின் அற்புத அனுபவங்கள்..

Published On :

"இருநாழி நெல் கொண்டு எண்ணான்கு அறம் வளர்ப்பவள்' அன்னை பராசக்தி. உலகத்து உயிர்கள் அனைத்துக்கும் படி அளக்கும் பெருமாட்டி அவள். பிள்ளை பசித்திருக்க பெற்றவள் மனம் தாங்குமா? எவ்வாறேனும் பிள்ளையின் பசியைப் போக்கும் கருணை உள்ளம் கொண்டவள் தானே தாய்.

பசித்துச் சோர்வடைந்திருந்த வள்ளலாருக்கு பாற்சோறு பரிவுடன் கொடுத்து பசியை நீக்கியது வடிவுடை அம்மன் அல்லவா?

திருவண்ணாமலையில் குகை நமசிவாயர் என்ற சித்தர் வாழ்ந்து வந்தார். அவருடைய சீடர் குரு நமசிவாயர். குரு பக்தியிலும் சிவபக்தியிலும் மிக்க ஈடுபாடு உடையவராக இருந்தார் குரு நமசிவாயர். அவரின் அற்புத ஆன்மிக ஈடுபாட்டை அறிந்த குகை நமசிவாயர், அவரை தில்லைக்குச் சென்று ஆன்மிகப் பணியாற்றும்படி பணித்தார்.

குருவின் வழிகாட்டுதலின்படி தில்லையை நோக்கி நடக்கத் தொடங்கினார், குரு நமசிவாயர். இரவு நேரம் ஆகிவிட்ட படியால், ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தார். சிறிது நேரம் கழித்து அவருக்குப் பசிக்க ஆரம்பித்தது. இருக்கும் இடமோ காடு. இரவு நேரம். ஞானிகள் உணவை நாடிச் செல்ல மாட்டார்கள்.

"இருக்கும் இடம் தேடி என் பசிக்கே அன்னம்

உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன்''

என்ற பட்டினத்தடிகளின் கவிதை நினைவுகூரத்தக்கது.

""அண்ணா மலையா ரகத்துக் கினியாளே

உண்ணா முலையே யுமையாளே } நண்ணா

நினைதோறும் போற்றி செய நின்னடியா ருண்ண

மனை தோறுஞ் சோறுகொண்டு வா''

(தனிப்பாடல் திரட்டு)

"அண்ணாமலையாருக்கு இனியவளே, உன்னைப் போற்றி வழிபடும் அடியேனுக்குச் சோறு கொண்டு வா'' என்று பாடியதும், பக்தனின் பசியை நீக்கும் விதமாக, அன்று இரவு அண்ணாமலையாருக்குப் படைத்த சர்க்கரைப் பொங்கலை எடுத்து வந்து, குரு நமசிவாயரின் முன் வைத்தாள் அம்பிகை. அன்னை கொடுத்த பிரசாதத்தை உண்டு பசியாறினார்.

அதேபோன்று, அவர் பசி எடுக்கும் வேளையில், அன்னையை மனம் உருகிப் பாடி சோறு கொண்டு வரச் சொல்வார். அன்னையும் அகமகிழ்ந்து சோறு கொண்டு கொடுப்பாள்.

ஒரு சமயம், அவர் விருத்தாசலம் வந்தார். அங்குள்ள மணிமுத்தா நதியில் நீராடி வழக்கம்போல தியானத்தில் ஆழ்ந்தார். பசிக்க ஆரம்பித்தது.

"நன்றி புனையும் பெரிய நாயகிஎனுங் கிழத்தி

என்றுஞ் சிவன்பால் இடக்கிழத்தி }நின்ற

நிலைக்கிழத்தி மேனி முழு நீலக் கிழத்தி

மலைக்கிழத்தி சோறு கொண்டு வா''

(தனிப்பாடல் திரட்டு)

என்ற பாடலைப் பாடினார். பாடலைக் கேட்டதும் அன்னை விருத்தாம்பிகை கையில் கோல் ஊன்றிக் கொண்டு, "அப்பா நீ என்னை கிழவி என்று பாடி விட்டாயே? கிழவிக்கு வேகமாக நடக்கத்தான் முடியுமா? வேலைதான் செய்ய முடியுமா? சோறு தண்ணிதான் கொண்டு வரமுடியுமா?'' என்று கேட்டாள்.

"அப்பா, நீ உன் வாக்கினாலே என்னை இளமையாகப் பாடு'' என்றாள் அம்பிகை. நித்யமான இறைவிக்கு முதுமை ஏது?

இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே என்றும், அழகு தழைத்த கல்யாண சுந்தரி என்றும், தெளிதமிழ் மதுரையில் வளருமொரு இளமயிலே என்றும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் குறிப்பிடுகிறார். அதனால் அகமகிழ்ந்த மீனாட்சியம்மை சிறு குழந்தையாக வந்து முத்து மாலையை குருபரர் கழுத்தில் அணிவித்தது நாம் அறிந்தது தான்.

"என்னை இளமையாகப் பாடு'' என்ற அன்னையின் சொல்லைக் கேட்டு, கீழ்க்கண்ட பாடலைப் பாடினார்.

"முத்தநதி சூழு முதுகுன் றுறைவாளே

பத்தர் பணியும் பதத்தாளே } அத்தர்

இடத்தாளே மூவா முலைமேலோ ரார

வடத்தாளே சோறு கொண்டு வா.''

(தனிப்பாடல் திரட்டு)

மணிமுத்தா நதி சூழ் திருமுதுகுன்றத்தில் வீற்றிருப்பவளே! அன்பர்கள் வணங்கும் திருவடிகளை உடையவளே! சிவனின் இடப்பக்கம் உறைபவளே! இளமையான தனங்களின்மேல் முத்தாரம் அணிந்தவளே! சோறு கொண்டு வா என்று பாடவும், அன்னை சோறு வந்து கொடுத்து குரு நமசிவாயரின் பசியாற்றினாள். இளமையை விரும்பிய இறைவியின் விருப்பத்தில் வியப்பேதும் இல்லை. இளமையே ஆற்றல்மிக்க பருவம் என்பது உண்மை.

- ராஜேஸ்வரி ராமச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.