வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

என்னதான் நடக்கிறது இலங்கையில்...? ராஜபட்சவின் பலமும் சிறீசேனாவின் பலவீனமும்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அடுத்த மாதம் 17-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேதி அறிவித்தாகிவிட்டது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற அதிபர்

News image
Updated On :18 ஜூலை 2015, 7:15 pm

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அடுத்த மாதம் 17-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேதி அறிவித்தாகிவிட்டது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததன் மூலமாக இலங்கையில் மகிந்த ராஜபட்சவின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பலர் நினைத்தனர். ஆனால், இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதன் மூலமாக ராஜபட்சவின் செல்வாக்கு இலங்கையில் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது.

இலங்கையின் ஆளும் கட்சியான "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு' சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் மகிந்த ராஜபட்ச. அவர் போட்டியிடுவதற்கான அனுமதியை, கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் இலங்கையின் இன்றைய அதிபர் மைத்ரிபால சிறீசேனாவே வழங்கினார். தனி சிங்களப் பிரதேசமான குருநாகலில் மகிந்த ராஜபட்ச எளிதாக வெற்றி பெறுவார் என்றே இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு'ம் அதிக அளவில் இடங்களைக் கைப்பற்றினால், அடுத்த பிரதமராக முடிசூடுவார் மகிந்த ராஜபட்ச!

ஆட்சியில் ராஜபட்ச இல்லாத கடந்த ஆறு மாதங்களை சரியாகப் பயன்படுத்தி, அவராலும் அவரது குடும்பத்தாலும் நிகழ்த்தப்பட்ட ஊழல்களைத் தோண்டி எடுத்திருந்தால், அவரை ஆயுள் காலம் முழுக்க அரசியலில் பங்கு பெறாமல் தடுத்திருக்க முடியும். இலங்கையில் ஊழல் தொடர்புள்ளவர்களை மீண்டும் அரசியலில் ஈடுபட விடமாமல் தடுப்பதற்கான வலுவான சட்டங்கள் உள்ளன. ஆனால், மகிந்த ராஜபட்சவுக்கு இருந்த மக்களின் அசுர பலத்தால் அவர் மீது ஒரு சிறு வழக்கைக் கூட இலங்கை அரசினால் பதிவு செய்ய முடியவில்லை. ராஜபட்சவுக்கு இருந்த மக்கள் தலைவர் என்ற பிம்பத்தால் அவர் மீது கை வைக்க புதிய ஆட்சியாளர்கள் தயங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக வெறும் ஆறே மாதங்களில் மீண்டும் அரசியலுக்கு மீள் பிரவேசம் செய்துள்ளார் அவர்.

ராஜபட்ச மீது சுமத்தப்பட்ட ஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவரைப் போட்டியிட அனுமதித்ததன் வாயிலாக தன்னை நம்பிய பெரும் கூட்டத்துக்கே துரோகம் இழைத்துவிட்டார் மைத்ரிபால சிறீசேனா என்றே பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். "பல நிர்பந்தங்களுக்கு மத்தியில்தான் ராஜபட்ச தேர்தலில் போட்டியிடும் அனுமதியை வழங்கினேன்' என சிறீசேனா சொன்னாலும், தன்னை நம்பியவர்களின் முதுகில் அவர் குத்திவிட்டார் என்றே பலரும் வெளிப்படையாகப் பேசுகின்றனர்.

மக்கள் தலைவர் பிம்பம்

துட்டகைமுனு மன்னனுக்குப் பிறகு இலங்கையை ஒருங்கிணைத்து ஆட்சி செய்தவர் ராஜபட்ச தான். கடந்த அதிபர் தேர்தல் சிங்களப் பகுதிகளில் மட்டும் நடைபெற்றிருந்தால், ராஜபட்சவே முடி சூடியிருப்பார். இன்றும் பல லட்சம் சிங்கள மக்கள் அவரைக் கடவுளாகவே வழிபடுகின்றனர். இலங்கைத் தமிழர்களில் குறிப்பிட்ட பகுதியினர் பிரபாகரனை எப்படித் தெய்வமாக வழிபடுகின்றனரோ அதேபோல, குறிப்பிட்ட பகுதி சிங்கள மக்களுக்கு ராஜபட்ச தான் கடவுள். தேர்தலில் தோல்வியுற்று, அரசியலில் இருந்து ராஜபட்ச ஒதுங்கியிருந்த நாள்களில், அவர் வீட்டு வாயிலில் கூடிய ஆயிரக் கணக்கான மக்கள், அவரை மீண்டும் அரசியலுக்கு வருமாறு இறைஞ்சியது வழக்கமாகவே இருந்து வந்தது.

"மகிந்த ராஜபட்ச அதிபர் தேர்தலில் தோற்றிருந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததாகச் சொல்ல முடியாது. ராஜபட்ச சிறுபான்மை மக்களால் தோற்கடிக்கப்பட்டார் என்ற உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் இனவாத சக்திகளால் ஏற்படுத்தப்பட்டு விட்டது. இது அவர் மீது அனுதாபத்தை உண்டாக்கியது. இந்த அனுதாபம் அவருக்கான ஆதரவு அலையாக மாறி இருக்கிறது. அதுவே அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடத் தூண்டியது.

அது மட்டுமல்ல, சிறீசேனா - ரணில் என்ற கூட்டணி அரசாங்கம் ஜனவரிக்குப் பின்னரான கடந்த ஆறு மாத ஆட்சியில் எந்த நல்லாட்சிக்கான அடையாளங்களையும் காட்டவில்லை. இது இந்தக் கூட்டணி மீது நம்பிக்கையின்மையை உண்டாக்கி இருக்கிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை இல்லாத நிலையும், தன் மீதான மக்களின் அனுதாப நிலையும்தான் ராஜபட்சவை மீண்டும் அரசியலில் ஈடுபடத் தூண்டிக் கொண்டிருக்கின்றன.

அத்துடன் இலங்கை சுதந்திரக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சிதறடிக்கப் போகிறது. அதற்கான வாய்ப்பை சிறீசேனா கொடுக்கிறார். ராஜபட்சவால் மட்டுமே இந்த நிலையில் கட்சியையும் கூட்டணியையும் பாதுகாக்க முடியும் என்று பலரும் நம்புகிறார்கள். இந்தப் பின்னணியில்தான் ராஜபட்ச களமிறங்குகிறார்' என்கிறார் இலங்கை எழுத்தாளர் கருணாகரன்.

தொடரப் போகும் பழிவாங்கல்கள்...

மீண்டும் பிரதமராக ஆட்சிப் பொறுப்புக்கு ராஜபட்ச வந்தால் தங்களை எப்படியெல்லாம் பழிவாங்க முயல்வார் என்பதை நினைத்துப் பலரும் நியாயமான கலக்கத்தில் உள்ளனர். இலங்கையின் கடந்தகால வரலாற்றை நோக்கினால், பழிவாங்கல்கள் ராஜபட்சவுக்குப் புதியதல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

கடந்த அதிபர் தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிராக, மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுவதாக அறிவித்தபோது, ஒரு பேட்டியில் ராஜபட்ச சிரித்தபடி சொன்னார், "அவர் தேவையில்லாமல் மரணத்துடன் நடனமாடுகிறார்'. இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும், விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் இலங்கையின் முப்படைகளை வழிநடத்தியவருமான சரத் பொன்சேகா, "சிறீசேனா வென்றால் அரியணையில் அமரலாம். தோற்றால், என்னை அடைத்து வைத்த அதே சிறை அறை காலியாக உள்ளது. அங்கே ஓய்வெடுக்கலாம்' என்று கூறினார். தன்னை எதிர்ப்பவர்களை ஒடுக்கி, தன் மீதான பயத்தை உருவாக்கி வைத்திருந்தார் ராஜபட்ச. தன் மீதான மற்றவர்களின் பயம்தான் தனது அசுர பலம் என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பவர் அவர்.

இலங்கை என்ற தேசத்தையே "இலங்கை பிரைவேட் லிமிடட்' ஆகத்தான் ராஜபட்சவும் அவரது குடும்பமும் ஆண்டார்கள். இலங்கையின் நிதிநிலை அறிக்கையில் சுமார் 70 சதவீதமானவை ராஜபட்ச குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்ட அமைச்சர்களாலேயே கையாளப்பட்டன. எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டனர்.

விமர்சித்து எழுதியவர்கள் கொலை செய்யப்பட்டனர். "சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லசந்த அப்படித்தான் கொலை செய்யப்பட்டார். ராஜபட்சவின் ஆட்சிக்கெதிராக கேலிச்சித்திரம் வரைந்த குற்றத்துக்காக பிரகீத் எகலியகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டார்.

இப்படியே போனால், இலங்கை என்ற தேசமே திவாலாகிப் போய்விடும் என்பதனால், ராஜபட்சவின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த சிறீசேனாவை தமது பக்கம் இழுத்து அவரை பொது வேட்பாளராக அறிவித்து வெற்றி பெற வைத்தன எதிர்க்கட்சிகள்.

சிறீசேனாவின் பலவீனங்கள்...

மகிந்த ராஜபட்ச போல கம்பீரமான, மக்களின் ஆதரவைப் பெற்ற தலைவராக சிறீசேனா இல்லை. இதுதான் அவரது மிகப் பெரிய பலவீனம். அவரது சொந்த மாவட்டமான பொலநறுவையைத் தாண்டி சிறீசேனாவை பெரிதாக யாருக்கும் அடையாளம்கூடத் தெரியாது.

இலங்கையின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக அதிபர் சிறீசேனா இருந்தாலும் கட்சியில் உள்ள பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ராஜபட்சவுக்கே உள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆதரவுடனும், சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழரின் ஆதரவுடன் வெற்றி பெற்றவர் என்பதனால், முழு மனதுடன் சிறீசேனாவை ஆதரிப்பதில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தயக்கம் உண்டு.

சிறீசேனா மீது ஊழலின் நிழல் படியவில்லை. அவர் பெரிதாக சர்ச்சைகளில் சிக்கவில்லை. பௌத்த சிங்களவர். கூடவே இறுதிப் போரின் இறுதித் தருணத்தில் மகிந்த நாட்டில் இல்லாததால், பாதுகாப்பு அமைச்சராக இருந்து போரை வழி நடத்தியவர் ஆகிய சில அடிப்படைத் தகுதிகள் இருந்ததால்தான் அவரை எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

ராஜபட்சவின் அணியில் இருந்த, அவரது நீண்ட கால விசுவாசி ஒருவரே எதிர்க்கிறார் என்றால், அங்கே ஏதோ பிரச்னை இருப்பதாக மக்களை நம்ப வைத்தனர். இதன் பின்னணியில் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செயல்பட்டது என்பதுதான் பரவலான கருத்து.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.