
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் மிட் ராம்னி ஆகியோர் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, டிரம்ப்பின் கடுமையான விமர்சகரான அவருக்குப் புதிய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நியூஜெர்சி மாகாணம், பெட்மின்ஸ்டர் நகரையொட்டி டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான கோல்ஃப் பண்ணை வீட்டில் சனிக்கிழமை இருவரும் சந்தித்துப் பேசினர். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் கலந்துரையாடினர். அந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த மிட் ராம்னி, அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் பேச வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் சந்திப்பு என்பதால் அவருக்கு எனது வாழ்த்துகளை நேரடியாகத் தெரிவித்தேன். அவரது தலைமையிலான அரசு அமைய ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். பல்வேறு விவகாரங்களைக் குறித்து இருவரது கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விவகாரங்களைக் குறித்து ஆழ்ந்த பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றார் மிட் ராம்னி.
அவரை வழியனுப்ப வந்த டிரம்ப்பிடம் சந்திப்பு குறித்த விவரங்களை செய்தியாளர்கள் கேட்டறிய முற்பட்டபோது, "மகிழ்ச்சிகரமான சந்திப்பு' என்பதைத் தவிர வேறு எதுவும் கூற மறுத்துவிட்டார்.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வின்போது, டொனால்ட் டிரம்ப்பை மிட் ராம்னி மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
டிரம்ப்பும் ராம்னியை கடுஞ்சொற்களால் விமர்சித்தார். எனினும் தேர்தல் நடந்து முடிந்து டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மக்கள் தீர்ப்பை ஏற்று மிட் ராம்னி அவரை சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த வழக்குரைஞரான மிட் ராம்னி, மாஸசூஸட்ஸ் மாகாணத்தின் ஆளுநராக 2003-ஆம் ஆண்டு முதல் 2007 வரை பொறுப்பு வகித்தவர். 2012-ஆம் ஆண்டில் ஒபாமாவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். குடியரசுக் கட்சியின் திறமை வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்புக்கு அவர் பரிசீலிக்கப்படுவார் என்று சில ஊடகங்கள் ஊகச் செய்தி வெளியிட்டு வருகின்றன. வேட்பாளர் தேர்வின்போது குடியரசுக் கட்சியில் ஒரு பிரிவினர் டிரம்ப்புக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கட்சித் தலைமை அவர்களைக் கண்டிக்கவில்லை என்பதில் டிரம்ப்புக்கு மனக்கசப்பு இருந்தது. இந்த நிலையில், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கட்சியில் அனைவரின் நம்பிக்கையையும் பெறும் வகையில் சில நியமனங்களைச் செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அந்த வகையில், கட்சியின் மூத்த தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்ற மிட் ராம்னிக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் கூறப்படுகிறது.
வெளியுறவுத் துறைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி பெயர் தீவிர பரிசீலனையில் உள்ளது என்று ஏற்கெனவே தகவல் வெளியானது. தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக உள்ள நிக்கி ஹேலி, கடந்த வாரம் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், செல்வாக்கும் திறமையும் நிறைந்தவர், நிர்வாகத்தில் அனுபவசாலி, இளைய தலைமுறைத் தலைவர் என்கிற முறையில் நிக்கி ஹேலிக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.