சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பயங்கரவாதத்தை ஒடுக்க கூட்டு முயற்சி தேவை: ஜி- 20 மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு கூட்டு முயற்சி தேவை என்று ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

News image
Updated On :7 ஜூலை 2017, 11:35 pm

DIN

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு கூட்டு முயற்சி தேவை என்று ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இரண்டு நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள ஹாம்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில், மோடி பேசியதாவது:
தெற்கு ஆசிய நாடுகளில் லஷ்கர்- ஏ- தொய்பா, ஜெய்ஷ்- ஏ- முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன.
இதேபோன்று, அரபு நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும், மத்திய கிழக்கு நாடுகளில் அல்- காய்தா அமைப்பும், நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பும் செயல்படுகின்றன. இந்த அமைப்புகளின் பெயர்கள் வெவ்வேறாக உள்ளன. எனினும், மக்களைக் கொல்ல வேண்டும், வெறுப்புணர்வை பரவச் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையுடன் இந்த அமைப்புகள் செயல்படுகின்றன.
சில நாடுகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக, பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன. (பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்). அதுபோன்ற நாடுகளுக்கு எதிராக, ஜி- 20 நாடுகள் கூட்டாக இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான குரல் பலவீனமாகவே இருப்பது கவலையளிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு, உலக நாடுகள் கூடுதல் ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று மோடி கூறினார்.
11 அம்சத் திட்டம்: மாநாட்டில், பயங்கரவாதத்தை வேரறுப்பதற்காக, 11 அம்ச செயல்திட்டத்தை மோடி அறிமுகப்படுத்தினார். அதில், ஜி- 20 நாடுகளுக்கு இடையே பயங்கரவாதிகளின் பட்டியலை பகிர்ந்துகொள்வது, பயங்கரவாதிகளை நாடு கடத்துவது போன்ற சட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியும், ஆயுதங்களும் சென்றடைவதைத் தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது ஆகியவற்றுக்கான ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
பிரிக்ஸ் நாடுகளுக்கு மோடி வேண்டுகோள்: இதனிடையே, பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும், சர்வதேச பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள், உலக நாடுகளை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, சீன அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில், மோடி பேசியதாவது:
பிரிக்ஸ் கூட்டமைப்பு, வலிமையான சக்தியாக விளங்குகிறது. இந்தக் கூட்டமைப்பு, பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும், சர்வதேச பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் உலக நாடுகளை வழிநடத்திச் சென்றிட வேண்டும்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, இந்தியாவில் சரக்கு- சேவை வரி விதிப்பு உள்பட பல்வேறு சீர்திருத்தங்களை எனது தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
பயங்கரவாதத்தையும், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி, புகலிடம் கொடுத்து அதை ஊக்குவிப்பதையும், ஜி- 20 கூட்டமைப்பு நாடுகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, ஜி- 20 நாடுகள், தொழில் துறையிலும், அறிவுசார் துறையிலும், வெளிநாடுகளுடனான போட்டியில் இருந்து உள்நாட்டுத் தொழில் துறையைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
சர்வதேச அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும், பாதுகாப்பு நிலைமை மோசமடைந்திருப்பதாலும், ஒவ்வொருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போர், சிரியா, லிபியா, யேமன் நாடுகளில் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றால் மேற்காசியப் பிராந்தியம் அழிவைச் சந்தித்துள்ளது.
வளைகுடா பகுதியில், பயங்கரவாதத்தை ஆதரித்ததாகவும், ஈரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறி, கத்தார் நாட்டுடனான தொடர்பை அரபு நாடுகள் துண்டித்துக் கொண்டு விட்டன.
புதிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா மீது போர் தொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால், கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் நிலவுவது கவலையளிக்கிறது.
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில், பிரிக்ஸ் நாடுகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட வேண்டியது கட்டாயம் என்று மோடி கூறினார்.
இந்தக் கூட்டத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பிரேசில் அதிபர் மைக்கேல் திமெர், ரஷிய அதிபர் புதின், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர்கலந்து கொண்டனர்.
சீன அதிபருடன் மோடி சந்திப்பு

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடி -  சீன அதிபர் ஜின்பிங். நாள்: வெள்ளிக்கிழமை.

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடி -  சீன அதிபர் ஜின்பிங். நாள்: வெள்ளிக்கிழமை.


ஜி- 20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனியின் ஹாம்பர்க் நகருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இம்மாநாட்டில் பங்கேற்க வந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிக்கிம் விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இரு தலைவர்களும் கைகுலுக்கி, விவாதம் நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, சமூக வலைதளமான டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'மோடியும், ஜின்பிங்கும் ஹாம்பர்க் நகரில் பிரிக்ஸ் தலைவர்களுக்கு சீனா அளித்த விருந்து நிகழ்ச்சியில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதம் நடத்தினர்' என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், இரு தலைவர்களும் என்னென்ன விவகாரங்கள் குறித்துப் பேசினர் என்ற விளக்கத்தை அவர் அளிக்கவில்லை. மோடியும் ஜின்பிங்கும் சந்தித்துக் கைகுலுக்கும் புகைப்படத்தையும் வெளியுறவுத்துறை அமைச்சகம், டுவிட்டரில் வெளியிட்டது.
முன்னதாக, மோடிக்கும், ஜின்பிங்கிற்கும் இடையே ஹாம்பர்க் நகரில் இருதரப்பு சந்திப்பு நடைபெறுவதற்கு சூழ்நிலை உகந்ததாக இல்லை என்று சீன அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியிருந்தார். அதற்கு மறுநாள் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.