
நியூயார்க்: நியூயார்க்கில் நடைபாதை பயணிகள் மீது சரக்கு லாரியை மோத வைத்து 8 பேரைக் கொலை செய்த சைபுல்லா சாய்போவ், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று உலகளாவிய ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் மன்ஹேட்டன் பகுதி ஹுஸ்டன் சாலையில் நவ.1-ம் தேதி வெள்ளை நிற சரக்கு லாரி ஒன்று அங்கிருந்த நடைபாதையில் சென்ற பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்தத் தாக்குதலை நடத்தியதாக சைபுல்லா சாய்போவ் என்பவரை அமெரிக்க போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் அகதியாக அமெரிக்காவில் குடியேறிய அவர், உபேர் கால்டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராகவும், சரக்கு வாகன ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் ஓட்டி வந்த வாகனத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி, ஆதரவு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் சைபுல்லா சாய்போவ், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று உலகளாவிய ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐஎஸ் அமைப்பின் அறிக்கையினை அமெரிக்க கண்காணிப்புக் குழு செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐஎஸ் அமைப்பின் போர் வீரர்களில் ஒருவர்தான் நியூயார்க் நகரத் தெருவில் இந்த தாக்குதலை நடத்தினார். அல்லாவின் கருணையால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆபரேஷன், அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த தூண்டியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.