விமானங்களை ஒப்பந்த அடிப்படையில் வாங்கியது தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா 9 கோடி டாலர்களை (சுமார் ரூ.579 கோடி) சிங்கப்பூர் நிறுவனத்துக்கு இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடு கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் மல்லையாவுக்கு இது, மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த பிஓசி விமான நிறுவனத்துக்கும் இடையே ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது 4 விமானங்களை ஒப்பந்த அடிப்படையில் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு வழங்குவது என்பது அதன் சாராம்சம். அவற்றில் 3 விமானங்கள் வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
ஆனால், உடன்படிக்கையில் குறிப்பிட்டபடி உரிய முன்பணத்தையும், ஒப்பந்தத் தொகையையும் செலுத்தாததால் நான்காவது விமானத்தை கிங்ஃபிஷருக்கு பிஓசி நிறுவனம் வழங்கவில்லை. இதுதொடர்பான வழக்கின் விசாரணை, பிரிட்டனில் அமைந்துள்ள லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதை விசாரித்த நீதிபதி பிக்கென், கடந்த 5-ஆம் தேதி தீர்ப்பளித்தார். கிங்ஃபிஷர் நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும், பிஓசி நிறுவனத்தின் கோரிக்கைகள் நியாயமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஒப்பந்தத் தொகை, அதற்கான வட்டித் தொகை, சட்ட நடவடிக்கைகளுக்கான செலவினங்கள் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாக 9 கோடி டாலர்களை பிஓசி தரப்புக்கு கிங்ஃபிஷர் நிறுவனம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ள பிஓசி நிறுவனம், இதுதொடர்பாக மேற்கொண்டு எந்தக் கருத்தையும் தற்போது கூற இயலாது எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக, விஜய் மல்லையா தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனிடையே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி பிரிட்டனுக்கு இந்தியஅரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, மல்லையாவை லண்டனில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கைது செய்தனர். எனினும், ரூ.5 கோடி (65 ஆயிரம் பவுண்டு) பிணைத் தொகை செலுத்தி கைதான மூன்று மணிநேரத்திலேயே மல்லையா ஜாமீனில் வெளிவந்தார். அதேவேளையில், அவரது கடவுச்சீட்டுகள், நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. நீதிபதி எம்மா ஆர்புத்நாட் முன்பு நடைபெற்று வரும் இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.