சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தாய்லாந்து: குகைக்குள் சிக்கிய மேலும் 4 பேர் மீட்பு: சிறுவர்களின் உடல் நலம் குறித்து அதிகாரிகள் மெளனம்

தாய்லாந்தில் வெள்ள நீர் புகுந்த குகைக்குள் சிக்கியவர்களில் மேலும் 4 சிறுவர்களை மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை மீட்டனர்.

News image
Updated On :10 ஜூலை 2018, 5:19 am

DIN

தாய்லாந்தில் வெள்ள நீர் புகுந்த குகைக்குள் சிக்கியவர்களில் மேலும் 4 சிறுவர்களை மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை மீட்டனர்.
அதையடுத்து, கடந்த 2 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான மீட்புப் பணிகளில் குகையிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது குகைக்குள் மேலும் 4 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் மட்டுமே சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து மீட்புப் பணிகளை முன்னின்று நடத்தி வரும் தாய்லாந்து கடல் அதிரடிப் படை அதிகாரி சித்திசாய் கிளாங்பட்டானா கூறியதாவது:
குகைக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி, திங்கள்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது.
இதில், மேலும் 4 சிறுவர்களை மீட்புக் குழுவினர் குகைக்குள்ளிருந்து மீட்டு அழைத்து வந்தனர் என்றார் அவர்.
எனினும், அந்த 4 சிறுவர்களின் உடல் நலம் பற்றியோ, மீட்புப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்றதா என்பது குறித்தோ அவர் விளக்கமாகத் தெரிவிக்கவில்லை.
கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் மழை வெள்ள நீர் புகுந்த குகைக்குள் சிக்கியிருந்த 13 பேரில், முதல்முறையாக 4 சிறுவர்களை மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டு அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்ட அந்த 4 பேரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், மீட்புப் பணிகள் எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருந்ததாகவும் அப்போது அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை நடைபெற்ற மீட்புப் பணிகளின்போது, குகைகக்கு வெளியே தயாராக நிறுத்தப்பட்டிருந்த 4 அவசரகால ஊர்திகளில் 4 பேர் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், அவர்கள்தான் மீட்கப்பட்ட சிறுவர்களா? அல்லது மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்களா? என்பது போன்ற விவரங்களைத் தெரிவிக்க தாய்லாந்து அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
திங்கள்கிழமைக்கான மீட்புப் பணிகள் தொடங்கி நிறுத்தி வைக்கப்படும்வரை அது தொடர்பான எந்த கேள்விகளுக்கும் பதிலளக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவரது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார்.
அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர். எனினும், திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது.
அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர்.
எனினும், தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்தத் தகவல், தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டன.
இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில் அந்த 13 பேரையும் 10 நாள்களுக்குப் பிறகு கண்டறிந்தார்.
பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய விடியோவை தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன.
குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், குகைக்குள் ஓடும் வெள்ள நீர் மற்றும் சகதியில் நீந்தி வர அவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்; அல்லது குகையில் வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் வெள்ள நீரில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் தயாரான பிறகு, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 4 சிறுவர்களும், திங்கள்கிழமை 4 சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

அவசர ஊர்தியில் அழைத்துச் செல்லப்பட்டவரை ஹெலிகாப்டரில் ஏற்றி அனுப்பும் மீட்புக் குழுவினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.