

மலேசியாவின் புதிய அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாமி தாமஸ் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
மலேசியாவில், மலாய் இனத்தைச் சாராத, முஸ்லிம் அல்லாத ஒருவர் முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மலேசிய வழக்குரைஞர்கள் கவுன்சில் உறுப்பினரும், பாரிஸ்டர் பட்டம் பெற்றவருமான டாமி தாமஸ் (66), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
மலேசிய தலைநககர் கோலாலம்பூரில் பிறந்தவரான அவரை, நாட்டின் புதிய தலைமை சட்ட ஆலோசகராக (அட்டர்னி ஜெனரல்) நியமிக்க, மகாதிர் முகமது தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு முடிவு செய்தது.
வழக்குரைஞர் கவுன்சிலில் இருந்து ஒருவர் அட்டர்னி ஜெனரலாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு: இதற்கிடையே, முஸ்லிம் அல்லாத மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை முதல் முறையாக அட்டர்னி ஜெனரல் பதவிக்கு நியமித்ததற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
எனினும், டாமி தாமஸின் பரிந்துரையை மன்னர் சுல்தான் முகமது ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர் அட்டர்னி ஜெனரலாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து மன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாமி தாமஸின் நியமனத்தை எதிர்ப்பதன் மூலம் மலேசியாவில் இன மற்றும் மதப் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என்று மதவாத அமைப்புகளைக் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.