தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாலியல் அடிமைகள் விவகாரம் முடிந்துவிடவில்லை: ஜப்பானிடம் தென் கொரியா திட்டவட்டம்

இரண்டாம் உலகப் போரின்போது கொரியப் பெண்களை தங்களது ராணுவம் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய விவகாரம் முடிந்துவிடப் போவதில்லை என்று தென் கொரிய

News image
Updated On :1 மார்ச் 2018, 7:31 pm

DIN

இரண்டாம் உலகப் போரின்போது கொரியப் பெண்களை தங்களது ராணுவம் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய விவகாரம் முடிந்துவிடப் போவதில்லை என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1919-ஆவது ஆண்டில், ஜப்பானிய காலனியாதிக்கத்துக்கு எதிராக கொரியாவில் புரட்சி வெடித்தது.
அதன் நினைவு தினத்தையொட்டி தென் கொரியத் தலைநகர் சியோலில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன் ஜே-இன் பேசியதாவது:
பாலியல் அடிமைகள் விவகாரத்தை முடித்துக் கொண்டதாக ஜப்பான் ஒருபோதும் கூறிவிட முடியாது.
'விவகாரம் முடிந்தது' என்ற பிரகடனங்கள் மூலம் போர்க் குற்றங்களை மூடி மறைத்துவிட முடியாது.
அத்தகைய விவகாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு, மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஜப்பான் உண்மையான பொதுமன்னிப்பு கோரினால், அந்த நாட்டுடன் நல்லுறவு மேம்படும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவத்தினரை மகிழ்விப்பதற்காக கொரிய தீபகற்பம், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 2 லட்சம் பெண்களை பாலியல் அடிமைகளாக ஜப்பான் பயன்படுத்தியதாக வரலாற்று அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
1910-ஆம் ஆண்டிலிருந்து, 1945-ஆம் ஆண்டு வரை கொரிய தீபகற்பம் ஜப்பானின் காலனியாதிக்கத்தின்கீழ் இருந்தபோது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், இந்தப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹை தலைமையிலான அரசுக்கும், ஜப்பானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போது உயிருடன் இருக்கும் முன்னாள் பாலியல் அடிமைப் பெண்களுக்கு 100 கோடி யென் (சுமார் ரூ.58 கோடி) இழப்பீடு வழங்குவதாகவும் ஜப்பான் ஒப்புக் கொண்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை விட்டுவிடுவதாக தென் கொரியாவும் ஒப்புக் கொண்டது.
இந்த ஒப்பந்தத்தை தென் கொரியாவின் ஒரு பிரிவினர் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.