சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பாகிஸ்தான் திரும்பினார் மலாலா: தலிபான் தாக்குதலுக்குப் பிறகு முதல் பயணம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்ஸாய், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயகமான பாகிஸ்தானை வியாழக்கிழமை வந்தடைந்தார்.

News image

பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககானுடன் (வலமிருந்து மூன்றாவமவர்) மலாலா.

Updated On :29 மார்ச் 2018, 7:26 pm

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்ஸாய், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயகமான பாகிஸ்தானை வியாழக்கிழமை வந்தடைந்தார்.
கடந்த 2012-ஆம் ஆண்டில் சிறுமியாக இருந்தபோது தலிபான் பயங்கரவாதிகள் சுட்டதில், தலையில் குண்டு பாய்ந்து சிகிச்சைக்காக பிரிட்டன் அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கேயே தங்கி படித்து வந்தார்.
பாகிஸ்தானில் பெண் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவாக மலாலா விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலிபான் பங்கரவாதிகள் அவரை சுட்டனர்.
தற்போது பாகிஸ்தானுக்கு நான்கு நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள மலாலாவின் பயணத் திட்டங்கள் அனைத்தும், அவரது பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதை வியாழக்கிழமை வந்தடைந்த மலாலா, பிரதமர் ஷாஹித் காகானை சந்தித்துப் பேசியதாக ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சி சுட்டுரையில் (டுவிட்டர்) தெரிவித்துள்ளது.
தனது பாகிஸ்தான் பயணம் குறித்து மலாலா கூறியதாவது:
பாகிஸ்தானுக்குத் திரும்பி வருவது எனக்கு மிகப் பெரிய கனவாக இருந்து வந்தது. நான் விமானத்தில் பறந்தாலும், லண்டன் வீதிகளில் காரில் பயணித்தாலும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி நகரங்களில் செல்வது போல கற்பனை செய்துகொள்வேன். 
ஆனால், தற்போது அந்த கற்பனை உண்மையியே நிஜமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.
தற்போது எனக்கு 20 வயது ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் நான் பல அனுபவங்களைப் பெற்றுவிட்டேன். மிகவும் அழகிய ஸ்வாட் பகுதியில் வளர்ந்தது, 2007-ஆம் ஆண்டிலிருந்து, 2009-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைக் கண்டது என எனக்கு நடந்த எதுவுமே என் கையில் இல்லை.
என்னைக் கேட்டிருந்தால் நான் பாகிஸ்தானை விட்டுப் போக சம்மதித்திருக்கவே மாட்டேன்.
ஆனால், தலையில் குண்டு பாய்ந்ததால் பிரிட்டன் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக அங்கேயே தங்கி, படிக்கவும் நேர்ந்தது.
இருந்தாலும், என் தாய் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் எனக்கு எப்போதுமே இருந்து வந்தது என்றார் அவர்.
மலாலாவை வரவேற்றுப் பேசிய பிரதமர் அப்பாஸி, நாட்டை விட்டு அவர் சென்ற பிறகு பாகிஸ்தான் அரசு கடுமையாகப் போரிட்டு பயங்கரவாதத்தை வேரறுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பெண்களின் கல்விக்கு ஆதரவாகப் பேசி வந்த மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 2012-ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டனர். 
இதில், தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய மலாலா, விமானம் மூலம் பிரிட்டன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை எழுப்பிய இந்தச் சம்பவத்தையடுத்து, மலாலாவுக்கும், அவரது பெற்றோருக்கும் பிரிட்டன் அடைக்கலம் அளித்தது.
இந்தச் சூழலில், மலாலாவுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து வழங்கப்பட்டது. அந்த வகையில் மிகவும் இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையையும் மலாலாவுக்குக் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.