மும்பை தாக்குதல் தொடர்பான கருத்து: நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்குத் தொடர மனு தாக்கல் 

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களுக்காக, நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் தொடர்பான கருத்து: நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்குத் தொடர மனு தாக்கல் 
Published on
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களுக்காக, நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி மும்பையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா தாக்குதல் நடத்தியது. இதில் 166 பேர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதில் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், கடந்த 2012-ஆம் ஆண்டு புணேவில் அமைந்துள்ள யெரவாடா மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜமாத்-உத்-தவாத் அமைப்பின் தலைவன் ஹஃபீஸ் சயீது முளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹஃபீஸ் சயீது, பாகிஸ்தானில் அரசியல் கட்சி நடத்தி வருகிறான். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு பலமுறை கோரிக்கை வைத்தும் அதை பாகிஸ்தான் அரசு நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இன்னும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் 'டான்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. அவர்களை போராளிகள் என்று அழைக்கும் நாம், எல்லை தாண்டிச் சென்று மும்பையில் 150-க்கும் மேற்பட்டவர்களை கொல்ல அனுமதிக்க வேண்டுமா? இதற்கான விளக்கத்தை எனக்கு அளியுங்கள். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்னும் ஏன் முடிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அவரது இந்த கருத்து பாகிஸ்தானில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்காக நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரி லாகூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் என்னும் அரசியல் கட்சியின் தலைவரான குர்ரம் நவாஸ் கண்டபுர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் நவாஸ் ஷெரிபின் கருத்துக்கள் தேச பாதுகாப்புக்கும் அரசு அமைப்புகளுக்கும் எதிரானது. இது தேசத்திற்கு துரோகம் செய்வது போன்றது என்பதால், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  பிராந்திய உள்விவகாரத் துறை அமைச்சரான அசன் இக்பாலும் இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தேசிய பாதுகாப்புக்கு குழு கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com