திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அணு ஆயுத மையங்களில் ஆய்வாளர்களை அனுமதிக்க வட கொரியா சம்மதம்: பாம்பேயோ

வட கொரியாவில் மூடப்பட்ட அணு ஆயுத மையங்களில் சோதனையிடுவதற்கு சர்வதேச நிபுணர்களை அனுமதிக்க அந்த நாடு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க

News image

தென் கொரியாவிலிருந்து திங்கள்கிழமை சீனா சென்ற பாம்பேயோவை வரவேற்கும் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ.

Updated On :9 அக்டோபர் 2018, 12:59 am IST


வட கொரியாவில் மூடப்பட்ட அணு ஆயுத மையங்களில் சோதனையிடுவதற்கு சர்வதேச நிபுணர்களை அனுமதிக்க அந்த நாடு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தென் கொரிய தலைநகர் சியோலில், அவர் கூறியதாவது:
வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்திய புங்கி-ரீ ஆய்வு மையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மூடப்பட்ட அந்த அணு ஆயுத சோதனை மையத்தைப் பார்வையிட சர்வதேச நிபுணர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் என்னிடம் தெரிவித்தார்.
போக்குவரத்து தொடர்பான விவரங்களில் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டால், அந்த சோதனை மையத்தைப் பார்வையிட சர்வதேச நிபுணர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.
வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது மிகவும் நீண்ட காலப் பணியாகும்.
அந்தப் பணியில் நாங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம் என்றார் அவர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மைக்கேல் பாம்போயோ, அதன் ஒரு பகுதியாக வட கொரியாவை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார்.
அங்கிருந்து தென் கொரியாவுக்குச் செல்வதற்கு முன்னர் கிம் ஜோங்-உனை தலைநகர் பியாங்கியோங்கில் சந்தித்து அவர் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கிம் ஜோங்குக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவது குறித்தும் இருவரும் விவாதித்தார்கள்.
தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறை நடைபெற்றது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ வட கொரியா சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.