நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணைகளுக்குத் தடை விதிக்கும் அமெரிக்க - ரஷிய ஒப்பந்ததை அதிபர் டிரம்ப் கைவிட்டால், உலகின் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்த காலகட்டத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட நடுத்தர தொலைவு ஏவுகணைகளை எல்லைப் பகுதியில் சோவியத் ரஷியா நிறுத்தியது.
அதனை எதிர்கொள்வதற்காக, நேட்டோ படையும் அமெரிக்காவின் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்தி வைத்தது.
இதனால் இரு தரப்பிலும் அணு ஆயுதப் போர் அபாயம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே 1981-ஆம் ஆண்டில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நடுத்தர தொலைவு ஏவுகணைகளைக் கைவிட இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
நடுத்தர தொலைவு அணு ஆயுத ஒப்பந்தம் எனப் பெயரிடப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனும், சோவியத் யூனியன் அதிபராக இருந்த மிகயீல் கோர்பசேவும் கையெழுத்திட்டனர்.
அந்த ஒப்பந்தத்தின்படி, தங்களிடம் ஏற்கெனவே இருந்த நடுத்தர தொலைவு ஏவுகணைகள், அவற்றை ஏவும் சாதனங்கள், எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை எதிர் தரப்பினரின் கண்காணிப்பின் கீழ் அழிக்கவும் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷியா ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷியா மீறி வருவதால் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இது, அமெரிக்கா, ரஷியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் திங்கள்கிழமை கூறியதாவது:
அமெரிக்கா - ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தத்தை கைவிடுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால், உலகில் அணு ஆயுதப் போர் அபாயம் மேலும் அதிகரிக்கும்.
அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷியா மீறி வருவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளது உண்மைக்குப் புறம்பானதாகும். அந்த ஒப்பந்த அம்சங்களைப் பின்பற்றுவதில் ரஷியா தொடர்ந்து உறுயுடன் இருந்து வருகிறது.
அந்த ஒப்பந்ததின் நோக்கத்தைக் குலைக்கும் வகையில், அமெரிக்காதான் நடந்து கொண்டுள்ளது.
அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா கைவிடுவதன் உண்மையான நோக்கம் கவலையளிப்பதாக உள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, 2 நாள் சுற்றுப் பயணமாக ரஷியா வந்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு அலோசகர் ஜான் போல்ட்டன், இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அழிக்கப்படும் நடுத்தர தொலைவு ஏவுகணை...
ஒப்பந்தம் பாதுகாக்கப்பட வேண்டும்
அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான அணு ஆயுத ஒப்பந்தத்தைப் பாதுகாக்க, இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மாஜா கோசிஜான்சிக் கூறியதாவது:
நடுத்தர தொலைவு அணு ஆயுத ஒப்பந்தத்தை பாதுகாப்பதிலும், அதன் அம்சங்களை தொடர்ந்து நிறைவேற்றுவதிலும் அமெரிக்கா மற்றும் ரஷியா தொடர்ந்து உறுதியுடன் இருக்க வேண்டும்.
அதற்காக, இரு நாடுகளும் தங்களுக்கிடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
ரஷியாவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தொலைபேசியில் அழைத்து வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க அதிபர் டொன்ல்ட் டிரம்ப்பை, அதிபர் மேக்ரான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அமெரிக்காவும், ரஷியாவுக்கும் இடையிலான நடுத்தர தொலைவு அணு ஆயுத ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அதிபர் மேக்ரான் வலியுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!

ஓடிடியில் மிரள வைக்கும் திரில்லர் திரைப்படம்: எதில் பார்க்கலாம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


