வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மீண்டும் ராஜபட்ச...!

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

News image
Updated On :28 அக்டோபர் 2018, 11:22 pm

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இதன்மூலம், அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த ராஜபட்ச, அதிபர் சிறீசேனா இருவரும் மீண்டும் கரம் கோத்துள்ளனர். ஆனால், இலங்கையின் பிரதமராக தானே இன்னும் நீடிப்பதாகவும், தன்னை பிரதமர் பதவியில் இருந்து விலக்கும் அதிகாரம் சிறீசேனாவுக்கு இல்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, பிரதமரை நியமிக்கும் அதிகாரம் இலங்கை அதிபருக்கு உள்ளது. ஆனால், பிரதமரை நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை. மாறாக நம்பிக்கையில்லா தீர்மானம், தாமாக பதவி விலகல், உயிரிழப்பு ஆகிய மூன்று சூழ்நிலைகளில் மட்டுமே பிரதமர் பதவி காலியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, ராஜபட்சவின் நியமனம் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும், இது ஒரு சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை என்றும் ரணில் கூறியுள்ளார்.

ஆனால், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உடையவரென தாம் நம்பும் எவரையும் பிரதமராக நியமிக்கும் உரிமை இலங்கை அதிபருக்கு உண்டு. அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தக் குழப்பத்தையே ராஜபட்ச தரப்பு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 225 ஆகும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 இடங்களைப் பெற வேண்டும். ராஜபட்ச - சிறீசேனா அணிக்கு 95 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ரணில் விக்ரமசிங்க அணிக்கு 106 இடங்கள் உள்ளன. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு 7 இடங்களும் ராஜபட்சவுக்கு 13 இடங்களும் தேவை. 

இந்நிலையில், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டினால் பெரும்பான்மையை தன்னால் நிரூபிக்க முடியும் என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அதைத் தடுப்பதற்காகவும், ரணில் தரப்பு உறுப்பினர்களைக் குதிரை பேரத்தின் மூலம் ராஜபட்ச தனக்கு ஆதரவாக இழுப்பதற்கும் ஏதுவாக, அதிபர் சிறீசேனா நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்டிருக்கிறார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை ராஜபட்சவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளன. இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமல்படுத்தும் உத்தரவாதத்தை எழுத்தில் வழங்கினால் ராஜபட்சவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், முழு அதிகாரம் உள்ள அதிபரின் ஆதரவு பெற்ற பிரதமர் வேட்பாளர் என்ற வகையில் ராஜபட்சவை பலரும் ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், ரணில் விக்ரமசிங்க மீது அதிருப்தியில் உள்ள சுமார் 20 ஐக்கிய தேசியக் கட்சி எம்பிக்கள் ராஜபட்சவுக்கு ஆதரவு தருவார்கள் எனத் தெரிகிறது. நவம்பர் 5- ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில், அக்கூட்டத்தை தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நவம்பர் மாதம் 16-ஆம் தேதிக்கு சிறீசேனா ஒத்திவைத்துள்ளார். இதன்மூலம், மேலும் பல எம்பிக்களை தனது பக்கம் இழுப்பதற்கு அவகாசம் ராஜபட்சவுக்கு கிடைத்துள்ளது. 

இதற்கிடையே, நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்றத்தலைவர் கரு ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை அதிபர் சிறீசேனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை ராஜபட்ச நிரூபிக்கும் வரையில், இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பிரதமராக ரணிலே நீடிப்பார் என்றும், பிரதமருக்குரிய சிறப்புரிமைகள் தொடரும் என்றும், அதை உறுதி செய்ய வேண்டியது இலங்கை அதிபரின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.இதனால், இலங்கையில் குழப்பநிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. ராஜபட்ச, சீனா சார்புடையவர். இவருடைய ஆட்சிக் காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட இலங்கையின் பல முக்கிய இடங்களில் சீனா கால்பதித்தது. இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்த சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பாக இந்தியாவுக்கு அவர் தெரியப்படுத்தவில்லை. இது இந்தியாவைக் கோபப்படுத்தியது. 

இந்து மகா சமுத்திரப் பகுதியில் இலங்கையைத் தளமாக வைத்து சீனாவின் ஆதிக்கம் அதிகரித்த போதுதான், இலங்கையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. அசைக்க முடியாத தலைவர் எனக் கருதப்பட்ட ராஜபட்சவை சிறீசேனா - ரணில் விக்ரமசிங்க கூட்டணி வீழ்த்தியது. அப்போது, தனது தோல்விக்கு இந்தியாதான் காரணம் என்று ராஜபட்ச வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருந்தார். 

2015 தேர்தலில் பிரதமராகிய ரணில் விக்ரமசிங்க இந்திய ஆதரவுக் கொள்கையைக் கடைப்பிடித்தார். இதற்கிடையே, இந்திய உளவு அமைப்பான "ரா', தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக சிறீசேனா கருதத் தொடங்கினார். இலங்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை கொலைச் சதியாக அவர் பார்த்தார். இதைத் தொடர்ந்து, சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில், தன்னையும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்சவையும் "ரா'அமைப்பு கொலை செய்ய முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்தியா அதை மறுத்து கடுமையாக எதிர்வினையாற்றியது. இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறு கூறவில்லை என சிறீசேனா அறிக்கை வெளியிட்டார். 

தன்னைக் கொலை செய்ய நடக்கும் சதியில், ரணிலுக்கும் பங்கு உள்ளது என சிறீசேனாவுக்கு சந்தேகம் எழுந்தது. கொலைச் சதியை தடுத்து நிறுத்தும் வகையில் ரணில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் கருதுகிறார். மேலும், 2020-இல் நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் சிறீசேனாவை தனது கட்சி சார்பில் நிறுத்த ரணில் விக்ரமசிங்க முன்வரமாட்டார். இந்நிலையில், சிங்கள மக்களின் ஆதரவு பெற்ற ராஜபட்சவுடன் பகைமையில் இருப்பது தனது எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்கும் என சிறீசேனா நினைக்கிறார். 

அடுத்த தேர்தலில் அதிபர் வேட்பாளராக ராஜபட்ச கட்சி சார்பில் சிறீசேனாவை நிறுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், ராஜபட்ச தரப்பு இதை உறுதி செய்துள்ளது. இதற்கிடையே, சிறீசேனா மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதில், சிறீசேனாவை ஆதரிக்க ராஜபட்ச அணி முடிவெடுத்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவும் சிறீசேனாவும் கூட்டணி அமைத்த சில மாதங்களிலேயே அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. சிறீசேனா இடதுசாரி சார்புள்ளவர். கிராமப்புற பின்னணியுடைய தீவிர பௌத்த சிங்களவர். ஆனால், ரணில் வலதுசாரி ஆதரவாளர். கொழும்பில் உயர் குடியில் பிறந்த அவர், தன்னை மதச்சார்பற்றவராகவே அடையாளம் காட்டுபவர். 

மீண்டும் ராஜபட்ச அதிபராக முடியாத வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்களை ரணில் கொண்டு வந்தார். இதற்கு சிறீசேனாவும் ஆதரவு அளித்தார். ஆனால், இந்த மாற்றங்களால் அதிபர் பதவியின் அதிகாரம் பெருமளவில் குறைந்து, பிரதமரின் அதிகாரம் ஓங்கியது. 

அதனால், பல முக்கிய முடிவுகளை சிறீசேனாவை கலந்து ஆலோசிக்காமல் ரணில் தன்னிச்சையாக முடிவெடுத்தார். இந்நிலையில்தான் "ரா'அமைப்பு தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்வதாக சிறீசேனா நம்பத் தொடங்கினார். அந்தச் சதியில் ரணிலுக்கு பங்கு உண்டு என அவர் நம்பத் தொடங்கியதுதான் சிக்கலின் ஆரம்பம் என்கிறார்கள். 

புது தில்லியில் மோடியைச் சந்தித்து விட்டு ரணில் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் இந்தியாவால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு சிறீசேனா தடையாக உள்ளார் என மறைமுகமாகக் கூறியிருந்தார். இது சிறீசேனாவைக் கோபப்படுத்தியுள்ளது. 

இலங்கையில் ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா எதிர்வினையாற்றவில்லை. இலங்கையில் நடைபெறும் பிரச்னையை வெறும் பார்வையாளர் கண்ணோட்டத்தில் நோக்குவதான தோற்றத்தைத்தான் இந்தியா கொடுத்துள்ளது. ஆனால், ஆட்சி மாற்றத்தில் இந்தியாவின் பங்கு உள்ளது என்று கொழும்பு வட்டாரங்கள் கூறுகின்றன. சில வாரங்களுக்கு முன்பு இந்தியா வந்த ராஜபட்சவிடம், இந்திய நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளக் கூடாது என்ற உறுதி பெற்றுக் கொள்ளப்பட்ட பிறகே ஆட்சி மாற்றம் நடந்துள்ளது என்கின்றனர். மேலும், 2015-இல் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு ஆட்சியைப் பறிகொடுத்த ராஜபட்ச மீண்டும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார் என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, ரணில் ஆதரவு முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாவலர்களுக்கும், ராஜபட்ச ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ராஜபட்சவின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையில் கடந்த 9 ஆண்டுகளாக இல்லாது இருந்த ஆயுதக் கலாசாரம் மீண்டும் தலைதூக்குமோ என்ற அச்சத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ராஜபட்சவுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முக்கிய நாடுகளின் தலைவர்கள் ராஜபட்சவுக்கு வாழ்த்துத் தெரிவிக்காத நிலையில் சீன அதிபரின் வாழ்த்து முக்கியமாக கருதப்படுகிறது. 

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சிறீசேனா அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே பிரதமராக ராஜபட்சவை நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.