தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீண்டும் மனுத்தாக்கல் 

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2019, 1:55 pm

லண்டன்: தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாக அவர் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. எனினும், அவரை அதிகாரிகள் கைது செய்வதற்கு முன்னரே அவர் லண்டன் தப்பிச் சென்றார். அதையடுத்து, அவர் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிரிட்டன் சட்ட விதிகளின்படி, மல்லையாவை நாடு கடத்துமாறு பிரிட்டன் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது. 

அதையடுத்து, மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி அனுப்பும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜீத் ஜாவித் கையெழுத்திட்டார். எனினும், அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் விஜய் மல்லையா. அந்த மனு கடந்த 8-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

அதேசமயம் இந்த உத்தரவுக்கு எதிராக மீண்டும் புதிதாக மனு தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில் தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவானது உரிய நேரத்தில் வாய்மொழி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று லண்டன் நீதிமன்ற அதிகாரி தெரிவித்துள்ளார். வாய்மொழி விசாரணை அடிப்படையில் விஜய் மல்லையாவின் மனுவை முழுமையான விசாரணைக்கு அனுப்புவது குறித்து நீதிபதி இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.