இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் எது?: பாகிஸ்தான் ராணுவம் தகவல் 

இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதலுக்கு ஜெஎப் 17 தண்டர் ரக விமானத்தைதான் பயன்படுத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது
இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் எது?: பாகிஸ்தான் ராணுவம் தகவல் 

இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதலுக்கு ஜெஎப் 17 தண்டர் ரக விமானத்தைதான் பயன்படுத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. 

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெ.இ.எம் பயங்கரவாத முகாம்களை கடந்த மாதம் 26-ம் தேதி குண்டுவீசி அழித்துவிட்டு  திரும்பியது.

இதையடுத்து இந்தியாவிற்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியா வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட எப்-16 ரக போர் விமானங்களை அப்போது பாகிஸ்தான் பயன்படுத்தியதாக கூறப்பட்டது. 

அப்போது இந்தியா கொடுத்த பதிலடியில் சுட்டு வீழ்த்தப்பட்ட எப்-16 ரக போர் விமான பாகம் ஒன்றை, தனது கூற்றுக்கு ஆதாரமாக இந்தியா தெரிவித்தது. அதேசமயம் இத்தகைய எப் 16 ரக போர் விமானங்களை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிபந்தனை விதித்து இருந்தது. எனவே பாகிஸ்தான் அந்த விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தியது. இது தொடர்பாக விசாரிப்பதாக அமெரிக்கா கூறி இருந்தது. ஆனால் இந்தியாவின் தாக்குதலில் எங்களுடைய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என கூறுவது பொய்யான தகவல் என பாகிஸ்தான் தொடர்ந்து பிரசாரம் செய்தது.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதலுக்கு ஜெஎப் 17 தண்டர் ரக விமானத்தைதான் பயன்படுத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதி கபூர் ரஷிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

நாங்கள் சீனத் தயாரிப்பான ஜெஎப் 17 தண்டர் ரக விமானங்களைதான் இந்தியாவிற்கு எதிராக நிலை நிறுத்தினோம். எங்களால் வலுவான பதிலடியை கொடுக்க முடியும் என்பதை இந்தியாவிற்கு நிரூபிக்க விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com