தாக்குதலுக்குள்ளான எண்ணெய் ஆலைகளில் விரைவில் உற்பத்தி: சவூதி அரேபியா உறுதி

யேமன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் பழுதடைந்துள்ள தங்களது எண்ணெய் ஆலைகளின் உற்பத்தி விரைவில் மீண்டும் தொடங்கும் என்று சவூதி அரேபியா உறுதியளித்துள்ளது.
சவூதி அரேபியாவின் அப்காய்க் எண்ணெய் ஆலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பழுதுபார்ப்புப் பணிகள்.
சவூதி அரேபியாவின் அப்காய்க் எண்ணெய் ஆலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பழுதுபார்ப்புப் பணிகள்.


யேமன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் பழுதடைந்துள்ள தங்களது எண்ணெய் ஆலைகளின் உற்பத்தி விரைவில் மீண்டும் தொடங்கும் என்று சவூதி அரேபியா உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து, அந்த ஆலைகளை நிர்வகித்து வரும் அரசு நிறுவனமான அராம்கோவின் பொது மேலாளர் ஃபஹத் அல்-அப்துல்கரீம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஆளில்லா விமானத் தாக்குதலாலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயாலும் பாதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஆலைகளில் பழுதுபார்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த ஆலைகளில் எண்ணெய் உற்பத்தி விரைவில் தொடங்கும். முன்பைவிட அதிக பலத்துடன் செயல்படவுள்ள நாங்கள், இந்த மாத இறுதிக்குள் எங்களது பழைய உற்பத்தி அளவை எட்டுவோம்.
தாக்குதல் நடைபெற்றபோது எங்களது ஆலைகளில் 300 பேர் இருந்தனர். இருந்தாலும், அதில் யாரும் காயமடையவில்லை என்றார் அவர்.
முன்னதாக, தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆலைகளையும், அங்கு நடைபெற்று வரும் பழுதுபார்ப்புப் பணிகளையும் செய்தியாளர்களை நேரில் அழைத்து அராம்கோ நிறுவனம் காட்டியது.
சவூதி அரேபியாவின் அப்காய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளிலுள்ள அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலைகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு, அண்டை நாடான யேமனில் இயங்கி வரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.
தாக்குதலுக்குள்ளான அப்காய்க் ஆலை, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையாகும். மேலும், குராயிஸ் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வயல், சவூதி அரேபியாவின் மிக முக்கிய எண்ணெய் வயல்களில் ஒன்றாகும்.
ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக அந்த ஆலையிலும், எண்ணெய் வயலிலும் தீப்பற்றி, கொழுந்துவிட்டு எரிந்ததால், அவை சேதமடைந்தன. அதையடுத்து, அந்த ஆலைகளில் உற்பத்தியை நிறுத்திவைப்பதாக அராம்கோ நிறுவனம் அறிவித்தது.
அதையடுத்து, அந்த நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஏறத்தாழ பாதி அளவுக்குக் குறைந்தது.
உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான அராம்கோவின் உற்பத்தி இந்த அளவுக்குக் குறைந்தது, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com