பரோல் குற்றவாளியால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இந்தோ அமெரிக்க மாணவி!

இந்த பூமியில் பெண்களுக்கு பாதுகாப்பான இடமென்றால் அது இனி அம்மாவின் கருப்பையாக மட்டுமே இருக்க வாய்ப்புண்டு! ரூத் ஜார்ஜின் ஆன்மா சாந்தியடையட்டும்.
RUTH GEORGE MURDER CASE
RUTH GEORGE MURDER CASE

ரூத் ஜார்ஜ்!

எண்ணற்ற எதிர்காலக் கனவுகளுடன் சிகாகோவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கனிசியாலஜி (kinesiology - மனித உடலியக்கவியல்) பயின்று வந்த 19 வயது இந்தோ அமெரிக்க மாணவி. பூர்வீகம் ஹைதராபாத். இந்தப் பெண்ணை டொனால்டு துர்மன் எனும் பரோல் கைதி பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொன்றதோடு அல்லாமல் சடலத்தை பல்கலைக்கழகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விடப்பட்டிருந்த மாணவியின் காரிலேயே விட்டுச் சென்றுள்ளான். இந்த டொனால்டு துர்மன் மீது மேலும் பல வழக்குகள் உள்ளன. இப்போதும் ராணுவத் தளவாடங்களைக் கடத்திய குற்றத்துக்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று 2 1/2 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் பரோலில் வெளிவந்திருப்பதாகத் தகவல். ஒரு பரோல் குற்றவாளி சற்றும் அச்சமின்றி மீண்டுமொரு திட்டமிட்ட கொலையை நிகழ்த்தியிருப்பது அங்கிருக்கும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போது அவன் மீது  first-degree murder and criminal sexual assault of the girl என்ற குற்றத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது,

ரூத் ஜார்ஜைப் பற்றி பேசுகையில் அவரது சகோதரி எஸ்தர் ஜார்ஜ் சொல்வதைக் கேட்கையில் பரிதாபமாக இருக்கிறது. எங்கள் வீட்டின் ஒளியாக இருந்தவள் ரூத். அவள் வயதைத் தாண்டி அவள் புத்திசாலியாக இருந்தாள். அவளுடைய மெச்சூரிட்டி லெவலைக் கண்டு நாங்கள் மட்டுமல்ல அவளுடன் பழகும் நண்பர்களும், உறவினர்களும் கூட வியந்து போவார்கள். அப்படிப்பட்டவளை  இத்தனை சீக்கிரமாக இழந்து விட்டோம். அவள் எல்லோருக்கும் பிடித்தவளாக இருந்தாள். அவளது இழப்பு தாங்கிக்கொள்ளக் கூடியது அல்ல’

- என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 

அத்துடன்  ரூத் பயின்று வந்த பல்கலைக்கழகமான யு.ஐ.சியின் அதிபர் மைக்கேல் அமிரிடிஸ் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்னவெனில் "ரூத் ஜார்ஜுக்கு தானொரு  சுகாதார நிபுணராக வேண்டும்  என்றும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கனவுகளும்  அபிலாஷைகளும் இருந்தன. அதையெல்லாம் அறிந்தவர்கள் என்ற முறையில் எங்கள் சமூக உறுப்பினர்களில் ஒருவரான ரூத்தின் அதிர்ச்சிகரமான உயிரிழைப்பை புரிந்துகொள்ள மிகக் கடினமாக இருக்கிறது. ரூத்தின் இழப்பால் நாம் அனைவருமே நிச்சயமாக பலவிதமான உணர்ச்சிகளின் வயப்பட்டவர்களாக இருக்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

ரூத் ஜார்ஜ் கடந்த வாரம் கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.  வார இறுதியில் தங்கள் மகளைக் காணவில்லை என்று ரூத்தின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். அந்தப் புகாரை விசாரிக்கத் தொடங்கிய காவல்துறைக்கு பல்கலைக்கழக வளாகத்தின் கார் பார்க்கிங் பகுதியில் பதிவான சிசிடிசி ஃபுட்டேஜ் ஒரு ஆவணமாகக் கிடைக்கிறது. அதில் கொலையாளி டொனால்டு துர்மன், சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணி அளவில் ரூத்தைப் பின் தொடர்ந்து கார் பார்கிங் பகுதியில் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. அதன் பின்னர் 1 மணி நேரம் கழித்து அங்கிருந்து டொனால்டு மட்டும் தனியாக வெளியேறும் காட்சியும் அதில் பதிவாகியிருந்தது.  அதைத் தொடர்ந்து காவலர்கள் டொனால்டை ஞாயிறு காலையில் கைது செய்து கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் தொடங்கினர்.  அப்போது ரூத்தை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதை டொனால்டு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மட்டுமல்ல பாலியல் பலாத்காரம் என்ற பெயரில் உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. பாலியல் இச்சை கொண்ட ஆணின் பார்வையில் பெண் என்பவள் எப்போதுமே வெறும் பாலியல் பண்டமாக மாத்திரமே தென்படுகிறாள். அப்போது தங்கள் எதிரிலிருக்கும் பெண்ணுக்கு இருக்கக் கூடிய எதிர்காலக் கனவுகள், குடும்பத்திலும், இந்தச் சமூகத்திலுமான அவளது பொறுப்புகள், தேவைகள், கடமைகள் எல்லாமே பொருளற்றதாக விடுகிறது அந்தக் காமுகக் கண்களுக்கு. தங்கள் தேவைகள் தீர்ந்தால் போதும் எனுமளவுக்கு ஆண் மிருகமாகி விடுகிறான். 

மிருகம் என்றால் மிருகத்திற்கு அது அவமானம்! பிறகு இவர்களை எப்படி வகைப்படுத்துவது? வாழத் தகுதியற்றவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆம் அந்த வாழத் தகுதியற்ற மிருகங்கள் இப்பொதெல்லாம் பச்சிளம் பெண் குழந்தைகளைக் கூட விட்டு வைப்பதில்லை எனும் போது 19 வயது இளம்பெண்ணைச் சிதைப்பதை நாம் எங்ஙனம் புரிந்து கொள்ள முடியும்?!

இந்த பூமியில் பெண்களுக்கு பாதுகாப்பான இடமென்றால் அது இனி அம்மாவின் கருப்பையாக மட்டுமே இருக்க வாய்ப்புண்டு!

ரூத் ஜார்ஜின் ஆன்மா சாந்தியடையட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com