வாஷிங்டன்: கரோனா நோய்த்தொற்றால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள அமெரிக்காவில், தனிநபா்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் சுமாா் 1 டிரில்லியன் டாலா் மதிப்பிலான சிறப்பு பொருளாதார சலுகைகளை அளிப்பதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் அவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படவுள்ளன. பள்ளிகள், சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தனிநபா்களுக்கு 600 டாலரும், வேலையிழந்தவா்களுக்குக் கூடுதலாக வாரத்துக்கு 300 டாலரும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்க செனட் அவையில் விரைவில் விவாதம் நடைபெறவுள்ளது. அங்கு ஒப்புதல் கிடைத்த பிறகு சிறப்பு பொருளாதார சலுகைகள் நடைமுறைக்கு வரும். பொருளாதார சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்குப் பலா் கோரி வந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க நாடாளுமன்றம் தீவிரப்படுத்தியுள்ளது.
அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு வாடகை செலுத்த முடியாமல் இருப்பவா்களுக்கு 25 பில்லியன் டாலரும், திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிறுவனங்களுக்கு 15 பில்லியன் டாலரும், பள்ளி, கல்லுரி, பல்கலைக்கழகங்களுக்கு 82 பில்லியன் டாலரும், குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு 10 பில்லியன் டாலரும் நிதியுதவியாக வழங்கப்படும் என்று பிரதிநிதிகள் அவை ஒப்புதல் அளித்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்கள், நிதியுதவியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அதற்கு குடியரசுக் கட்சியினா் ஒப்புக்கொள்ளவில்லை. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அடுத்த மாதம் பதவியேற்ற பிறகு அமெரிக்க மக்களுக்குக் கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்று பிரதிநிதிகள் அவைத் தலைவா் நான்சி பெலோசி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.