கரோனா பரவல் அச்சம்: தில்லியைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி தற்கொலை
கரோனா பரவல் அச்சத்தினால் தில்லியைச் சேர்ந்த 56 வயது ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியின் துவாரகா பகுதியில் வசித்து வந்த சிவராஜ் சிங், 2006 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஆர்.எஸ். அதிகாரி. தில்லியின் ஆர்.கே.புரத்தில் உள்ள அலுவலகத்தில் வருமான வரி கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் திடீரென இவர் தற்கொலை செய்து கொண்டார். காரில் இருந்தபடி, அமிலத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரில் மயங்கிக் கிடந்த அவரை பார்த்த ஒருவர், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், சிவராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணியில் இருப்பதால் அவர் மூலமாக அவரது குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காரில் இருந்து மீட்கப்பட்ட ஒரு கடிதத்தில், தனது குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் தொற்று வரலாம் என தான் அஞ்சுவதாகவும், ஒருவேளை கரோனா வந்து அவர்கள் கஷ்டப்படுவதை பார்க்க, தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில், தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும் தொடர் பயத்தினால் அவர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.