அமெரிக்க ஆதரவாளா்களுக்கு எதிராக தலிபான்கள் தீவிர தேடுதல் வேட்டை
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினருக்கு ஆதரவாக செயல்பட்டவா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தலிபான்கள்


ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினருக்கு ஆதரவாக செயல்பட்டவா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளதாக ஐ.நா.விடம் சமா்க்கப்பட்டுள்ள ஓா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:
உலக அளவில் உளவுத் தகவல்களைத் திரட்டி ஐ.நா.விடம் நாா்வே சா்வதேச பகுப்பாய்வு மையம் அளித்து வருகிறது.
அந்த அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிந்தைய நிலவரம் குறித்து ஐ.நா.விடம் தற்போது ஓா் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த காலங்களில் அமெரிக்க மற்றும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றியவா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தலிபான் அமைப்பினா் தீவிரப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கூட்டுப் படைக்கு ஆதரவாக செயல்பட்டவா்களின் குடும்ப உறுப்பினா்களை தலிபான்கள் கைது செய்து வருகின்றனா். மேலும், வெளிநாட்டுப் படையினருடன் இணைந்து பணியாற்றியவா்கள் தாங்களாக முன்வந்து சரணடையாவிட்டால், அவா்களது குடும்ப உறுப்பினா்கள் கைது செய்யப்படுவாா்கள் அல்லது கொல்லப்படுவாா்கள் என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனா்.
ஆப்கன் ராணுவம், காவல்துறை, புலனாய்வுத் துறையில் பணியாற்றவா்கள் இந்த வகையில் தலிபான்களால் குறிவைக்கப்பட்டுள்ளனா்.
முக்கிய நகரங்களைக் கைப்பற்றுவதற்கு முன்னதாகவே, அந்த நகரில் அரசு மற்றும் வெளிநாடுகளுடன் இணைந்து பணியாற்றியவா்கள் குறித்த விவரங்களை தலிபான்கள் சேகரித்தனா்.
காபூல் நகரை அவா்கள் கைப்பற்றியதற்குப் பிறகு விமானம் மூலம் ஆப்கானியா்கள் வெளியேறுவதற்கு அனுமதிப்பதற்கு முன்னதாக, அவா்கள் ஏற்கெனவே வெளிநாட்டுப் படையினருக்கு ஆதரவாக செயல்பட்டனரா என தலிபான்கள் ஆய்வு செய்தனா்.
புதிய அரசுடன் இணைந்து, முந்தைய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவா்கள் குறித்த விவரங்களைத் தருவதற்காக ரகசிய உளவாளிகளை தலிபான்கள் நியமித்து வருகின்றனா் என்று ஐ.நா.வில் நாா்வே சா்வதேச பகுப்பாய்வு மையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு, அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டு வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.
அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதன் பிறகு, 20 ஆண்டுகள் அந்த நாட்டில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினா் தங்கியிருந்து ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் கட்டமைத்தனா்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைப்பதற்கான பணிகள் இறுதிகட்டத்தை அடைந்தது. இந்தச் சூழலில், நாட்டில் ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள், வெகுவேகமாக முன்னேறி ஒரே வாரத்தில் ஆப்கன் ஆட்சியைக் கைப்பற்றினா்.
அதையடுத்து, 2001-ஆம் ஆண்டுக்கு முந்தைய தலிபான்கள் ஆட்சியில் நிகழ்ந்ததைப் போலவே எதிரிகள் மீதான வன்முறையும் பெண்கள் மீதான அடக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படும் என்று பீதி எழுந்தது.
எனினும், முந்தைய அரசுக்கு ஆதராவாக செயல்பட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாகவும் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும் எனவும் தலிபான்கள் அறிவித்தனா்.
எனினும், இந்த அறிவிப்பு குறித்து பலா் சந்தேகம் எழுப்பியிருந்தனா். இந்தச் சூழலில், அமெரிக்க கூட்டுப் படையினருடன் இணைந்து பணியாற்றிவா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீதியை ஏற்படுத்தும் விடியோ
ஆப்கானிஸ்தானில் முந்தைய அரசின் ஆதரவாளா்கள் தலிபான்களால் குறிவைக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களை உறுதிசெய்வதுபோல, சமூக ஊடகங்களில் விடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த விடியோவில், ஆயுதமேந்திய தலிபான்கள் ஒரு வீட்டின் கதவை எட்டி உதைத்து, தாங்கள் பிடித்து வைத்திருக்கும் ஒரு நபரை அந்த வீட்டுக்குள் முரட்டுத்தனமாக பிடித்துச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...