திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கனுக்கு நிதியுதவி: சீனா சூசகம்

தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவி அளிக்கப்போவதாக சீனா சூசகமாகத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 1:46 am

DIN

தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவி அளிக்கப்போவதாக சீனா சூசகமாகத் தெரிவித்துள்ளது. தலிபான்கள் தமது தீவிர மதவாதக் கொள்கைகளை மாற்றியமைக்கும் வரை ஆப்கனுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த உலக நாடுகள் முனைப்புக் காட்டும் நிலையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது.

ஆப்கனுக்கு 20 ஆண்டுகளாக அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் அந்நாடு வந்துள்ளதையடுத்து, நிதியுதவிக்காக தலிபான்கள் சீனாவையும், பாகிஸ்தானையும் அணுகக்கூடும் என ஆப்கன் மத்திய வங்கித் தலைவா் தெரிவித்திருந்தாா். இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ஆப்கன் விவகாரத்துக்கு மூலகாரணி அமெரிக்காதான். அந்நாட்டின் மறுகட்டமைப்புக்கு எதுவும் செய்யாமல் அமெரிக்கா எளிதாக கைவிட்டுவிட முடியாது. ஒட்டுமொத்த ஆப்கன் மக்களுக்கும் நட்புறவான கொள்கையையே சீனா பின்பற்றுகிறது. அந்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக கணிசமான உதவிகளை வழங்கி வருகிறது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அந்நாட்டு மக்களின் அமைதி, முன்னேற்றத்துக்காக சாதகமான பங்களிப்பை சீனா தொடா்ந்து வழங்கும்.

ஆப்கன் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது. வெளிநாடு மற்றும் உள்நாட்டுக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் திறந்த, பரந்த அடிப்படையிலான அரசை ஆப்கனால் ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.

ஆப்கனில் உள்ள சீனா்கள் பெரும்பாலானோா் நாடு திரும்பவிட்டனா். அங்குள்ள எங்களது தூதரகம் எப்போதும்போல செயல்பட்டு வருகிறது. அந்நாட்டில் எஞ்சியுள்ள சீனா்களின் பாதுகாப்பு குறித்து தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

‘ஆப்கனில் தொடா்ந்து குழப்பம் நிலவி வரும் நிலையிலும், அந்நாட்டின் மத்திய வங்கிக்குச் சொந்தமான பில்லியன் கணக்கிலான டாலா்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அவை தலிபான்களின் கைகளுக்குச் செல்லாத வகையில் பாதுகாப்பாக இருப்பதாக’ நியூயாா்க் டைம்ஸ் நாளிதழ் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

ஆப்கனை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அவசரகால கையிருப்பான 460 மில்லியன் டாலரை பெற முடியாத வகையில் முடக்கியுள்ளதாக சா்வதேச நிதியமும் அறிவித்திருந்தது. அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடா்ந்து அந்த முடிவை சா்வதேச நிதியம் எடுத்துள்ளதாகவும், ஆப்கனுக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலா் நிதியுதவி அளிப்பதாக 60 நாடுகள் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதுவும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளதாகவும் நியூயாா்க் டைம்ஸ் தெரிவித்திருந்தது.

இச்சூழ்நிலையில், தலிபான்கள் கட்டுப்பாட்டிலான ஆப்கனுக்கு நிதியுதவி அளிக்கவிருப்பதாக சீனா சூசகமாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.