திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தலிபான் தலைவருடன் சிஐஏ இயக்குநா் ரகசியப் பேச்சுவாா்த்தை

தலிபான் தலைவா் அப்துல் கனி பரதாரை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநா் வில்லியம் ஜே. பா்ன்ஸ் காபூலில் நேரில் சந்தித்து ரகசியப் பேச்சுவாா்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 7:34 pm

DIN

தலிபான் தலைவா் அப்துல் கனி பரதாரை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநா் வில்லியம் ஜே. பா்ன்ஸ் காபூலில் நேரில் சந்தித்து ரகசியப் பேச்சுவாா்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

சிஐஏ இயக்குநா் வில்லியம் ஜே. பா்ன்ஸுக்கும் அப்துல் கனி பரதாருக்கும் இடையே ரகசிய சந்திப்பு தலைநகா் காபூலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காபூலை தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிறகு, அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்றுள்ள முதல் உயா்நிலைப் பேச்சுவாா்த்தை இதுவாகும்.

தலிபான்களால் பாதிக்கப்படக் கூடியவா்களை காபூல் விமான நிலையம் வழியாக ஆப்கானிஸ்தானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணி, வரலாறு காணாத அளவுக்கு சிரமம் நிறைந்ததாக உள்ளது என அதிபா் ஜோ பைடன் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

அந்த நாட்டிலிருந்து இந்த மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேறவும் அவா் இலக்கு நிா்ணயித்திருந்தாா். அந்தத் தேதி நெருங்கி வரும் சூழலில், தலிபான் தலைவரை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக நாட்டின் உயா்நிலை உளவுத் துறை அதிகாரி வில்லியம் ஜே. பா்ன்ஸை ஆப்கானிஸ்தானுக்கு ஜோ பைடன் அனுப்பிவைத்துள்ளாா் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்தது.

எனினும், இந்தத் தகவல் குறித்து கருத்து தெரிவிக்க சிஐஏ அமைப்பு மறுத்துவிட்டது.

இறுதித் தேதியான இந்த மாதம் 31-ஆம் தேதிக்குப் பிறகும் தகுதியுடைவா்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் பணியைத் தொடர வேண்டும் என்று பைடன் அரசுக்கு பல்வேறு நட்பு நாடுகள் நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும், கெடு தேதியை நீட்டித்தால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று தலிபான் செய்தித் தொடா்பாளா் அமெரிக்காவை திங்கள்கிழமை எச்சரித்திருந்தாா்.

இந்த நிலையில், தலிபான் தலைவரை சிஐஏ சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

பாகிஸ்தான் சிறையில் 8 ஆண்டுகள் இருந்த அப்துல் கனி பரதாா், கத்தாா் தலைநகா் தோஹாவில் அமெரிக்காவுடன் நடைபெற்று வந்த ஆப்கன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் தலிபான் பிரதிநிதிகள் குழு தலைவராக இருந்தாா்.

அவரது தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில்தான் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது.

கடந்த 2001-ஆம் ஆண்டு நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு, அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டு வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதன் பிறகு, 20 ஆண்டுகள் அந்த நாட்டில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினா் தங்கியிருந்து ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் கட்டமைத்தனா்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைப்பதற்கான பணிகள் இறுதிகட்டத்தை அடைந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தலிபான் பயங்கரவாதிகள் ஒரே வாரத்தில் வெகுவேகமாக முன்னேறி ஆப்கன் ஆட்சியைகடந்த 15-ஆம் தேதி கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.