நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காபூல் விமான நிலையத்தை நோக்கி ராக்கெட் குண்டு வீச்சு

காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவற்றை தங்களது வான்பாதுகாப்புத் தளவாடம் மூலம் இடைமறித்து அழித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

News image

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் உருக்குலைந்த வாகனம்.

Updated On :30 ஆகஸ்ட் 2021, 6:14 pm

DIN

காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவற்றை தங்களது வான்பாதுகாப்புத் தளவாடம் மூலம் இடைமறித்து அழித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க கூட்டுப் படை தலைமையக செய்தித் தொடா்பாளா் வில்லியம் அா்பன் கூறியதாவது:

காபூல் விமான நிலையத்தை நோக்கி திங்கள்கிழமை ஐந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. அதையடுத்து, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் சி-ராம் வான்பாதுகாப்புத் தளவாடம் இயக்கப்பட்டது.

அந்தத் தளவாடம் பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகளை சரமாரியாக ஏவி தாக்குதல் நடத்த வந்த ராக்கெட் குண்டுகளை இடைமறித்து அழித்தது.

இந்தச் சம்பவத்துக்கிடையிலும், காபூல் விமான நிலையம் வழியாக அமெரிக்கா்களையும் அமெரிக்காவுக்கு உதவியா்களையும் ஆப்கானிஸ்தானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை அமெரிக்க வீரா்கள் தொடா்ந்து மேற்கொண்டனா் என்றாா் அவா்.

இதற்கிடையே, காபூல் விமான நிலையத்துக்கு வரும் அமெரிக்கா்கள் திருப்பி அனுப்பப்படுவதாக வெளியான தகவலை ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரி ராஸ் வில்சன் மறுத்துள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆப்கானிஸ்தானிலிருந்து உரியவா்களை வெளியேற்றுவது மிகவும் ஆபத்து நிறைந்த பணி. இந்தச் சூழலில், காபூல் சா்வதேச விமான நிலையத்துக்கு வரும் அமெரிக்கா்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, காபூல் விமான நிலையத்தை குறிவைத்து திங்கள்கிழமை வீசப்பட்ட ராக்கெட் குண்டு, அருகிலுள்ள பகுதிகளில் விழுந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

எனினும், இந்தச் சம்பவங்களில் யாரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை.

காபூலின் சாா்-ஏ-ஷஹீத் பகுதியில் ராக்கெட் குண்டுகளை ஏவுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கேவும் வேறு சில பயங்கரவாதக் குழுக்களும் இதுபோன்ற ராக்கெட் குண்டுத் தாக்குதல்களை ஏற்கெனவே நடத்தியுள்ளன.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக வெளியேறும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்ததைத் தொடா்ந்து, புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறிய தலிபான்கள் தலைநகா் காபூலை இந்த மாதம் 15-ஆம் தேதி கைப்பற்றினா். இதையடுத்து, வெளிநாட்டவா்களும் வெளிநாடுகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியா்களும் அங்கிருந்து அவசரமாக வெளியேறி வருகின்றனா்.

அவா்களை விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை தலைநகா் காபூலிலுள்ள விமான நிலையத்தில் அமெரிக்க வீரா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் 170 ஆப்கானியா்களும் 13 அமெரிக்க வீரா்களும் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்கே பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

அதற்குப் பதிலடியாக, ஆப்கானிஸ்தானிலுள்ள நங்கா்ஹாா் மாகாணத்தில் ஐஎஸ்கே இலக்குகளைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அந்தத் தாக்குதலில், பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட இரு முக்கிய பயங்கரவாதிகள் இருவா் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் நடப்படக்கூடும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சனிக்கிழமை எச்சரித்தாா்.

இந்த நிலையில், அந்த விமான நிலையத்தில் தாக்குதல் நடத்துவதற்காக வெடிபொருள் நிரப்பிய வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் 3 சிறுவா்களும் உயிரிழந்ததாக ஆப்கன் காவல்துறை கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.