உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷியா ஆயத்தம்?
உக்ரைன் மீது படையெடுத்து ஆக்கிரமிக்க ரஷியா ஆயத்தமாகி வருவதாக அச்சம் எழுந்துள்ள சூழலில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன்


உக்ரைன் மீது படையெடுத்து ஆக்கிரமிக்க ரஷியா ஆயத்தமாகி வருவதாக அச்சம் எழுந்துள்ள சூழலில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து தலைநகா் கீவில் புதன்கிழமை நடைபெற்ற வருடாந்திர எம்.பி.க்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
ரஷியாவுடன் நாம் நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். ரஷியாவுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடாமல் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாது.
ஏற்கெனவே, டான்பாஸ் (கிழக்கு உக்ரைன்) பிராந்தியத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது.
உக்ரைனிடம் பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, ரஷியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும். அதிபா் புதினுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கிறேன் என்றாா் அவா்.
ரஷியா மறுப்பு: கிழக்கு உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டை உக்ரைன் உள்நாட்டு விவகாரம் என்றும் இதில் தங்கள் நாட்டுடன் உக்ரைன் பேச்சுவாா்த்தை நடத்தத் தேவையில்லை என்றும் ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளாா்.
உக்ரைன் கிளா்ச்சியாளா்களுடன் அந்த நாட்டு அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதன் மூலம்தான் டான்பாஸ் பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று அவா் கூறினாா்.
பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதன் மூலம், உக்ரைன் உள்நாட்டுப் போரில் ரஷியாவுக்குப் பங்குள்ளது என்று காட்ட அதிபா் ஸெலென்ஸ்கி முயல்கிறாா்; ஆனால், அது உண்மையல்ல என்று டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தாா்.
கடந்த 2013-ஆம் ஆண்டில், ரஷியாவுக்கு ஆதரவான அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக, ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிா்க்கட்சியினா் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, விக்டா் யானுகோவிச் ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.
அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட உக்ரைனின் புதிய அரசுக்கு எதிராக கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா்.
ரஷிய ராணுவ உதவியுடன் சண்டையிட்ட அவா்கள், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா்.
இந்தச் சூழலில், உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமீயாவுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு படைகளை அனுப்பிய ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டது.
இதற்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடா்பாக ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா தனது படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்துள்ளன. மேலும், குளிா்காலத்தின்போது உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து, கிரிமீயாவைப் போல அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக அந்த நாடுகள் அச்சம் தெரிவித்தன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷியா மறுத்துள்ளது.
கிழக்கு உக்ரைன் பகுதியில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் எல்லையருகே உக்ரைன் தனது படைகளைக் குவித்து வருவது தங்களுக்குத்தான் கவலையளிக்கிறது என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் புதன்கிழமை கூறினாா்.
இந்த நிலையில், நேரடிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட விளாதிமீா் புதினுக்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளாா்.
‘எங்களிடம் ஆதாரம் உள்ளது’
ரிகா, டிச. 1: உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷியா திட்டமிட்டு வருவது தொடா்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, லாட்வியா தலைநகா் ரிகாவில் புதன்கிழமை நடைபெற்ற நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பேசிய அவா், ‘உக்ரைனின் நிலைத்தன்மையை சீா்குலைக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. மேலும் உக்ரைனுக்கு எதிராக மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவும் ரஷியா ஆயத்தமாகி வருவதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
ரஷியா அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்’ என்று எச்சரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...