

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவராக ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரான நான்சி பெலோசி 4-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், அவரது வெற்றியை எதிர்த்து அதிபர் டிரம்ப் தரப்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கூடிய புதிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. தற்போதைய பிரதிநிதிகள் சபை தலைவரான ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசிக்கும் (80), குடியரசு கட்சியின் கெவின் மெக்கர்த்திக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பதிவான 427 வாக்குகளில் நான்சி பெலோசி 216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கெவின் மெக்கர்த்திக்கு 209 வாக்குகள் கிடைத்தன. செனட்டர் டாமி டக்வொர்த், ஹக்கீம் ஜெஃப்ரீஸ் ஆகியோருக்கு தலா ஒரு வாக்கு கிடைத்தது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி 11 இடங்களை இழந்ததால் அக்கட்சிக்கு பிரதிநிதிகள் சபையில் 222 உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 6 பேர் பெலோசிக்கு வாக்களிக்கவில்லை. ஆனால், 209 உறுப்பினர்களைக் கொண்ட குடியரசுக் கட்சியின் வாக்குகள் அனைத்தும் கெவின் மெக்கார்த்திக்கு கிடைத்தன.
இந்த வெற்றியின் மூலம் பிரதிநிதிகள் சபை தலைவராக நான்சி பெலோசி 4-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மற்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
2006-இல் பிரதிநிதிகள் சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அப்பதவியை வகித்த முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றார் நான்சி பெலோசி. 2006 முதல் 2011 வரை சபையை வழிநடத்திய அவர், 2018-ஆம் ஆண்டு முதல் மீண்டும் பிரதிநிதிகள் சபை தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க வரலாற்றில் மிகவும் மாறுபட்ட பிரதிநிதிகள் சபை தலைவராகப் பணியாற்றுவது எனக்குப் பெருமை அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை ஆர்வலரான பெலோசி, மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுபவர். இந்திய-அமெரிக்க உறவின் வலுவான ஆதரவாளர். அவருக்கு புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனும், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸூம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.