இராக் பிரதமரை கொல்ல முயற்சி; வெடிபொருள்கள் அடங்கிய ட்ரோன் மூலம் தாக்குதல்

இராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி வீட்டில் வெடிபொருள்கள் அடங்கிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி அவரை கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது.
ஈராக் பிரதமர் (கோப்புப்படம்)
ஈராக் பிரதமர் (கோப்புப்படம்)

இராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி வீட்டில் வெடிபொருள்கள் அடங்கிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி அவரை கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, பாக்தாத் நகரில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். இது அவரை கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி என இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

முஸ்தபா அல்-காதிமியை கொல்ல நடத்தப்பட்ட தாக்குதலில் அவரின் தனிப்பட்ட காவலர் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வன்முறை வெடித்ததன் விளைவாக போராட்டம் வெடித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஈரான் ஆதரவு ஆயுதம் ஏந்திய குழுவினர் நாடாளுமன்றத்தில் விகித்த வந்த அதிகாரத்தை இழந்துவிட்டதாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் அவர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

பாக்தாத்தில் அரசின் கட்டிடங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில்தான் பிரதமர் வீடும் அமைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. பிரதமர் நல்ல உடல்நிலையுடன் உள்ளார் என இராக் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், மேலும் தகவல்களை அளிக்க ராணுவம் மறுத்துள்ளது.

பிரதமர் காதிமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் பாதுகாப்பாக உள்ளார். அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என பதிவிடப்பட்டுள்ளது. பிரதமர் காதிமியின் இல்லம் குறைந்தது ஒரு வெடிவிபத்தினாலாவது சிக்கியிருக்கலாம் என இரண்டு அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், காதிமியின் வீட்டின் வெளியே நின்றிருந்த தனிக் காவலர்கள் ஆறு பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில், நாடாளுமன்றத்திலும் அரசிலும் தங்கள் அதிகாரத்தை வளர்த்துக்கொண்ட ஈரான் போராளிக் குழுக்களின் ஆதரவாளர்கள் அக்டோபர் 10 தேர்தல் முடிவுகளை எண்ணுவதில் வாக்காளர் மோசடி மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com