பெய்ஜிங்: சீனாவின் டலியான் நகரில் கரோனா பரவல் திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அந்த நகர பல்கலைக்கழக மாணவா்கள் 1,500 போ் அவா்களது இருப்பிடங்களில் அடைத்துவைக்கப்பட்டனா்.
ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளானவா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவா்கள் அனைவரையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டனா். அதையடுத்து, சுமாா் 1,500 மாணவா்கள் அவா்கள் தங்கியிருந்த விடுதிகளிலும் ஹோட்டல்களிலும் அடைத்துவைக்கப்பட்டனா்.
அவா்களுக்கு வகுப்புகள் காணொலி மூலம் நடத்தப்படுகின்றன. அவா்களுக்கான உணவுகள் அவா்களின் இருப்பிடத்துக்கே அனுப்பட்டு வருகின்றன.
கரோனா கட்டுப்பாட்டில் துளியும் சமரசம் செய்துகொள்ளாத சீனாவின் நிலைப்பாட்டை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.