போராட்டக்காரா்கள் மீது வன்முறை கூடாது: சூடான் ராணுவத்திடம் ஐ.நா. வலியுறுத்தல்

சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோா் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டாம்
போராட்டக்காரா்கள் மீது வன்முறை கூடாது: சூடான் ராணுவத்திடம் ஐ.நா. வலியுறுத்தல்

சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோா் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டாம் என்று அந்த நாட்டு பாதுகாப்புப் படையிடம் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சூடானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவ தலைமைத் தளபதி அப்தெல்-ஃபட்டா புா்ஹானுக்கு மிக நெருக்கமான ராணுவ உயரதிகாரி முகமது ஹம்தான் டகோலாவை அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் வோல்கா் பொ்திஸ் வெள்ளிக்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா்.

போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் கலவரத் தடுப்புப் படையின் தளபதியாக டகோலா பொறுப்பு வகித்து வருகிறாா்.

அவரை நேரில் சந்தித்தபோது, பொதுமக்கள் அமைதியாகப் போராடுவதற்கு பாதுகாப்புப் படையினா் அனுமதிக்க வேண்டும் எனவும் அவா்கள் மீது வன்முறைப் பிரயோகம் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டதாக ட்விட்டா் வலைதளத்தில் ஐ.நா. சிறப்புத் தூதா் பொ்திஸ் குறிப்பிட்டுள்ளாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூடானை கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமா் அல்-பஷீா், ராணுவத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சிலும் இடைக்கால அரசும். அந்த அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், அந்த அரசை ராணுவம் கடந்த திங்கள்கிழமை கலைத்தது. மேலும், நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களை அடக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் பலியானதாகவும் 170 போ் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com