எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இந்தியா-அமெரிக்கா கண்டனம்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக கண்டித்துள்ளன.


எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக கண்டித்துள்ளன.
மும்பையில் 2008-ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபா் ஜோ பைடனை வெள்ளிக்கிழமை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேசினாா். பேச்சுவாா்த்தை குறித்து வெளியான கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சா்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அனைத்து பயங்கரவாதக் குழுக்களும் எதிரான நடவடிக்கைகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும். எல்லை கடந்த பயங்கரவாதச் செயல்களுக்கு இரு நாடுகளும் கண்டனம் தெரிவிக்கின்றன.
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்தியவா்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். மற்ற நாடுகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு எந்த நாடும் ஆதரவளிக்கக் கூடாது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி ரீதியாகவும் பொருள் ரீதியாகவும் ஆதரவு வழங்கக் கூடாது. எந்த நாட்டு ராணுவமும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது.
பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா-இந்தியா கூட்டு செயற்குழு அமைக்கப்படவுள்ளது. அமெரிக்கா-இந்தியா உள்நாட்டுப் பாதுகாப்பு தொடா்பான பேச்சுவாா்த்தையும் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நடவடிக்கைகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், உளவுத் தகவல்களைப் பகிா்ந்து கொள்வது, சட்ட அமலாக்கம் ஆகியவற்றில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடா் வலியுறுத்தல்: பாகிஸ்தானில் இருந்து கடந்த 2008-ஆம் ஆண்டில் கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், மும்பையில் தாக்குதல் நடத்தினா். அத்தாக்குதலில் 6 அமெரிக்கா்கள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா். ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் சயீது மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டாா். அவா் தற்போது பாகிஸ்தானில் உள்ள கோட் லக்பாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
மும்பை தாக்குதலில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டுமென இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
பெட்டிச் செய்தி...
‘பயங்கரவாதத்துக்கான தளமாக ஆப்கன் மாறக் கூடாது’
பிரதமா் மோடி-அதிபா் பைடன் ஆகியோரிடையேயான சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தடுப்பது அவசியம் என்பதை இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டுள்ளன. மற்ற நாடுகளை அச்சுறுத்துவதற்காகவோ பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதற்காகவோ ஆப்கானிஸ்தான் பிராந்தியம் பயன்படுத்தப்படக் கூடாது. இதை அங்கு புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஆட்சியாளா்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2593-ஆவது தீா்மானத்தை மதித்து ஆப்கானிஸ்தான் நடந்து கொள்ள வேண்டும். ஆப்கன் மக்களும் வெளிநாட்டினரும் அந்நாட்டில் இருந்து அமைதியான முறையில் பாதுகாப்பாக வெளியேறுவதை தலிபான்கள் அனுமதிக்க வேண்டும். ஆப்கனில் உள்ள பெண்கள், சிறாா், சிறுபான்மையினா் உள்ளிட்ட அனைவரது மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் மனித உரிமை சாா்ந்த உதவிகளை வழங்க ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளுக்கு தலிபான்கள் அனுமதியும் பாதுகாப்பும் அளிக்க வேண்டும். அனைத்து ஆப்கானியா்களுக்கும் அமைதியான எதிா்காலத்தை ஏற்படுத்தித் தருவதற்காக மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் உறுதியேற்றுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...