கரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரேசில்; அதிபர் மீது கொலை வழக்கு?

அதிபராக இருப்பதால் ஜெய்ர் போல்சொனாரோ மீது இத்தகை வழக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்புகள் குறைவு என்றே வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவை மோசமாகக் கையாண்டு உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக இருந்ததாகக் கூறி, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ மீது கொலை உள்பட 13 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டு எம்பிகளை உள்ளடக்கிய குழு அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ மீது 13 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. 

அதேநேரம், அதிபராக இருப்பதால் ஜெய்ர் போல்சொனாரோ மீது இத்தகை வழக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்புகள் குறைவு என்றே வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பரிந்துரை மீதான வாக்கெடுப்பு அடுத்த வாரம் பிரேசில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. 

இது குறித்து பிரேசில் அதிபர் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த பரிந்துரை குறித்த தகவல் வெளியாகும் முன், கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ர் போல்சொனாரோ, இந்த விசாரணையை ஒரு நகைச்சுவை என்றும் அரசியல் ரீதியாக ஆதாயம் தேடும் நோக்கில் இந்த விசாரணை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார். 
 
கரோனா உருமாறி கொண்டே செல்வதால், அதை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கரோனாவிலிருந்து பாதுகாக்கும் பேராயுதமாக மாறியுள்ளது. பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் தடுப்பூசி பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். 

இருப்பினும், சில நாட்டு தலைவர்கள் தடுப்பூசி முக்கியத்துவத்தை உணராமல் தொடர்ந்து பழமைவாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவும். தொடர்ந்து தடுப்பூசிக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பி வருகிறார். இந்தநிலையில், கொலை உள்பட 13 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கரோனா உயிரிழப்புகள் பிரேசில் நாட்டில் தான் பதிவாகியுள்ளது. பிரேசில் நாட்டில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com