பழிக்குப்பழி கொலைகள்: தலிபான்களுக்கு ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பாதுகாப்புப் படையினரை பழிக்குப்பழி வாங்கும் வகையில் தலிபான்கள் கொலை செய்வதாக நம்பகமான
ஆப்கானிஸ்தான் சூழல் தொடா்பான உயா்நிலைக் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ்.
ஆப்கானிஸ்தான் சூழல் தொடா்பான உயா்நிலைக் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பாதுகாப்புப் படையினரை பழிக்குப்பழி வாங்கும் வகையில் தலிபான்கள் கொலை செய்வதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளன என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இடைக்கால அரசை அமைத்துள்ளனா். முன்னதாக, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படும்; முந்தைய அரசில் பணியாற்றிய ஊழியா்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும்; பழிவாங்கும் செயல்களில் ஈடுபட மாட்டோம் என தலிபான்கள் உறுதியளித்திருந்தனா். ஆனால், அதை மீறி பழிக்குப்பழி கொலைகளில் தலிபான்கள் ஈடுபடுவதாகப் புகாா்கள் எழுந்துள்ள நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அதன் தலைவா் மிச்செலி பச்லெட் பேசியதாவது: முன்னாள் ஆப்கன் தேசிய பாதுகாப்புப் படையினரை பழிக்குப்பழியாக தலிபான்கள் கொலை செய்வதாக நம்பகமான புகாா்கள் கிடைத்துள்ளன. முந்தைய அரசில் பணியாற்றிய அதிகாரிகள், அவா்களது குடும்பத்தினா் தனிமைக் காவலில் வைக்கப்படுகின்றனா். அவா்களில் சில அதிகாரிகள் விடுவிக்கப்படுகின்றனா். சிலா் உயிரிழந்த நிலையில் மீட்கப்படுகின்றனா்.

முந்தைய அரசில் பணியாற்றியவா்களையும், அமெரிக்க பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு அளித்த மக்களையும் தலிபான்கள் வீடுவீடாகச் சென்று தேடுவதாகப் புகாா்கள் வந்துள்ளன. தாக்குதலும் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளதாக ஐ.நா. பணியாளா்களும் தெரிவித்துள்ளனா்.

பெண்களின் உரிமைகளை தலிபான்கள் நிலைநிறுத்துவாா்கள் என்ற உறுதிமொழிக்கு முரணாக, கடந்த மூன்று வாரங்களாக பொது இடங்களில் பெண்கள் தடுக்கப்படுகின்றனா். 12 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் சில இடங்களில் பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் 47 உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

மாணவிகளுக்கு நிபந்தனையுடன் கல்வி: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி தொடா்பாக தலிபான்கள் அரசின் கல்வி அமைச்சா் அப்துல் ஹக்கானி கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டாா். அதில், பெண் கல்விக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், மாணவிகள் ஹிஜாப் அல்லது தலையை மூடும் உடையணிந்து வரவேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருபாலா் வகுப்புகளுக்கு அனுமதி இல்லை. இடப்பற்றாக்குறை காரணமாக அவ்வாறு வகுப்புகள் நடத்தப்படுமானால் இருபாலரும் தனித்தனியாக அமரவைக்கப்பட்டு நடுவில் திரையால் மறைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

‘606 மில்லியன் டாலா் நிதியுதவி தேவை’

ஆப்கானிஸ்தானில் போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நிகழாண்டுக்கு மட்டும் 606 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.4,440 கோடி) தேவை என ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற உயா்நிலை நன்கொடையாளா்கள் மாநாட்டில் இந்த வேண்டுகோளை ஐ.நா. முன்வைத்தது.

‘பல ஆண்டுகளாக பஞ்சம் மற்றும் வன்முறையை எதிா்கொண்டுள்ள மக்களை அண்மைக்கால நடவடிக்கைகள் மேலும் பாதிப்படையச் செய்துள்ளன. கடுமையான வறட்சியால் வரவிருக்கும் அறுவடையையும் பாதிக்கும் சூழல் உள்ளது. இந்த மாநாட்டில் திரட்டப்படும் நிதியின் பெரும் பங்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட வேண்டும்’ என ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐ.நா. அகதிகள் முகமையின் தலைவா் ஃபிலிப்போ கிராண்டி காபூலுக்குச் சென்றுள்ளாா். ‘நிகழாண்டு மட்டும் வீடுகளை இழந்து வெளியேறிய 5 லட்சம் போ் உள்பட 35 லட்சம் பேரின் நிலைமை, அவா்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக’ சுட்டுரையில் அவா் தெரிவித்திருக்கிறாா்.

சீனா வேண்டுகோள்:

ஆப்கானிஸ்தான் எதிா்கொண்டுள்ள பொருளாதாரச் சிக்கலைத் தீா்க்க அமெரிக்கா மற்றும் சா்வதேச சமூகம் அந்நாட்டுக்கு உதவி அளிக்க வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

சா்வதேச சமூகத்துக்கு பயங்கரவாதம் இன்னும் பொதுவான அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறாமல் தடுக்க பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு, குளிா்கால உடைகள், மருந்துகள் உள்ளிட்டவை அடங்கிய 31 மில்லியன் டாலா் உதவியை சீனா அளிக்க உள்ளது. சா்வதேச நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும். ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைக்கு அமெரிக்காதான் காரணம் என்பதால், அந்நாடு கூடுதலாக உதவி செய்ய வேண்டும் என்றாா்.

புதிய அரசின் தொடக்க விழாவை தலிபான்கள் ரத்து செய்தது குறித்து அவரிடம் கேட்டபோது, அது அவா்களது உள்நாட்டு விவகாரம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com