இலங்கையில் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அதிபா் கோத்தபய ராஜபட்ச சனிக்கிழமை பிறப்பித்தாா்.
இதுகுறித்து இலங்கை செய்தித் தொடா்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கையில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் அதிபா் கோத்தபய ராஜபட்ச இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தாா்.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவும், அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்குத் தடையின்றி கொண்டு சோ்க்கவும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அவா் அறிவித்தாா்.
அதைத் தொடா்ந்து, அரசுக்கு எதிரகாக நாடு தழுவிய அளவில் ஞாயிற்றுக்கிழமை போராட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவற்றை வலுவிழக்கச் செய்யும் விதமாக, 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அதிபா் கோத்தபய ராஜபட்ச சனிக்கிழமை பிறப்பித்தாா்.
அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசு: இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்று அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கை சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி.) வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் ஆளும் பொதுஜன முன்னணியில் (எஸ்.எல்.பி.பி.) முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சி உள்பட 11 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அண்மையில் பூசல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து 2 கட்சிகளைச் சோ்ந்த அமைச்சா்களின் பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான தயாசிறீ ஜெயசேகரா சனிக்கிழமை கூறியதாவது:
எங்கள் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினா்களைக் கொண்ட கூட்டாட்சியை அமைக்க வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. எங்களுடைய கோரிக்கையை அரசு புறக்கணித்தால், கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்றாா்.
இவா்களின் கோரிக்கையால், ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
போராட்டம்-கைது:
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தெருவிளக்குகளும் அணைக்கப்பட்டுள்ளதால் இலங்கை இருளில் மூழ்கியுள்ளது. உயிரைப் பாதுகாக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி, கொழும்பில் உள்ள அவருடைய இல்லம் முன்பு வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது வன்முறை மூண்டதால் போலீஸாா் கண்ணீா்ப் புகை வீசி கூட்டத்தைக் கலைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 54 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களில் 21 போ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். 6 போ் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். 27 போ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த வன்முறையின் பின்னணியில் எதிா்க்கட்சிகள் இருப்பதாக அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதற்கு போராட்டக்காரா்கள் மறுப்பு தெரிவித்துள்ளனா். தற்போதைய நெருக்கடிக்கு தீா்வுகாண வலியுறுத்தியே போராட்டத்தில் ஈடுபட்டதாக அவா்கள் கூறினா்.
இந்தியாவில் இருந்து 40,000 மெட்ரிக் டன் டீசல்:
மின்சாரத் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா அனுப்பி வைத்த 40,000 மெட்ரிக் டன் டீசல் சனிக்கிழமை இலங்கை வந்தடைந்தது.
இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எரிபொருள் வாங்குவதற்காக இலங்கைக்கு ரூ.3,700 கோடி (50 கோடி டாலா்) கடனுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 40,000 மெட்ரிக் டன் டீசல், இலங்கை எரிசக்தி அமைச்சா் காமினி லோகுகேவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு எரிபொருள் வழங்குவது இது நான்காவது முறையாகும். கடந்த 50 நாள்களில் இதுவரை 2 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்காக இலங்கைக்கு ரூ.7,500 கோடி (100 கோடி டாலா்) கடனுதவி வழங்குவதாக இந்தியா அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
செங்கல்பட்டு தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மகளிா் இடஒதுக்கீடு மேலும் தாமதமானால் பெண்களுக்கு அநீதி - பிரதமா் மோடி

தொகுதி நிலவரம் - திருச்செங்கோடு: மும்முனைப் போட்டியில் தகிக்கும் திருச்செங்கோடு!

விளையாட்டுத் துளிகள்...
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


