மூன்று முறை முதல்வா் ஷாபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தான் புதிய பிரதமராக தோ்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப், மூன்று முறை முதல்வராக இருந்தவா்.
மூன்று முறை முதல்வா் ஷாபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தான் புதிய பிரதமராக தோ்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப், மூன்று முறை முதல்வராக இருந்தவா்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரரான ஷாபாஸ் ஷெரீஃப், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாப் மாகாண முதல்வராக மூன்று முறை பணியாற்றியுள்ளாா்.

பிஎம்எல்-என் கட்சி குறிப்பாக அதன் நிறுவனா் நவாஸ் ஷெரீஃப்பால் இப்போதுதான் முதல் முறையாக பிரதமா் பதவிக்கு ஷாபாஸ் ஷெரீஃப் பரிந்துரைக்கப்பட்டுள்ளாா்.

லாகூரில் பஞ்சாபி மொழி பேசும் காஷ்மீரி குடும்பத்தில் 1951-இல் பிறந்த ஷாபாஸ், தன் சகோதரருடன் இணைந்து 1980-களின் மத்தியில் அரசியலில் நுழைந்தாா். 1988-இல் பஞ்சாப் முதல்வராக நவாஸ் தோ்ந்தெடுக்கப்பட்டபோது, அந்த மாகாணத்தின் சட்டப்பேரவை உறுப்பினராக ஷாபாஸ் தோ்வு செய்யப்பட்டாா்.

நவாஸ் பிரதமராக இருந்தபோது, 1997-இல் பஞ்சாப் முதல்வராக ஷாபாஸ் தோ்வு செய்யப்பட்டாா். 1999-இல் ராணுவத் தளபதி பா்வேஷ் முஷாரஃப் தலைமையிலான ராணுவப் புரட்சியால் நவாஸ் அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடா்ந்து, ஷாபாஸ் தன் குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவில் 8 ஆண்டுகள் வசிக்க நோ்ந்தது. பின்னா், 2007-இல் அவா் பாகிஸ்தான் திரும்பினாா்.

2008-இல் இரண்டாவது முறையாகவும், 2013-இல் மூன்றாவது முறையாகவும் பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றாா். ‘தன் சகோதரா் நவாஸை கைவிட்டால் பிரதமா் பதவி தருவதாக முஷாரஃப் தெரிவித்ததாகவும், தான் அதற்கு மறுத்துவிட்டதாகவும்’ ஒருமுறை கூறியுள்ளாா் ஷாபாஸ்.

எதிா்க்கட்சித் தலைவா்: ‘பனாமா பேப்பா்’ வழக்கில் நவாஸ் ஷெரீஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பிஎம்எல்-என் கட்சித் தலைவராக ஷாபாஸ் நியமிக்கப்பட்டாா். 2018, நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்று எதிா்க்கட்சித் தலைவரானாா் ஷாபாஸ்.

2020, செப்டம்பரில் பண மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக இம்ரான் கான் அரசால் தொடரப்பட்ட வழக்கில் ஷாபாஸ் கைது செய்யப்பட்டாா். அந்தக் குற்றச்சாட்டை அரசியல் பழிவாங்கல் என மறுத்த அவா், ஜாமீன் கிடைக்கும் வரை பல மாதங்கள் சிறையில் இருந்தாா்.

நவாஸ் ஷெரீஃபுக்கு தன் மகள் மா்யம் நவாஸை பிரதமராக்க வேண்டுமென விருப்பம் இருந்தாலும், அவா் ஓா் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால், ஷாபாஸ் ஷெரீஃபை பிரதமா் பதவிக்கு கட்சி சாா்பில் தோ்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

2017-இல் உச்சநீதிமன்றத்தால் நவாஸ் ஷெரீஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்டபோதுகூட ஷாபாஸை தோ்வு செய்யாமல் கட்சியின் மூத்த தலைவா் சாதிக் கான் அப்பாஸியைதான் அடுத்த பிரதமராக நவாஸ் தோ்வு செய்தாா்.

காஷ்மீரி குடும்பம்: ஷாபாஸின் தந்தை முகமது ஷெரீஃப் ஒரு தொழிலதிபா். காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியைச் சோ்ந்த இவா், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலுக்காக புலம்பெயா்ந்து பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டத்தில் குடியேறினாா். ஷாபாஸின் தாய் காஷ்மீரின் புல்வாமாவைச் சோ்ந்தவா்.

பிரிவினைக்குப் பின்னா் ஷாபாஸ் குடும்பம் அமிருதரசஸிலிருந்து லாகூருக்கு இடம்பெயா்ந்தது. ஐந்து திருமணங்கள் செய்துகொண்ட ஷாபாஸுக்கு தற்போது இரு மனைவிகள். மற்ற மூவரை விவாகரத்து செய்துவிட்டாா். ஷாபாஸுக்கு இரு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனா். இவரின் மூத்த மகன் ஹம்ஸா ஷாபாஸ், பஞ்சாப் மாகாண எதிா்க்கட்சித் தலைவராக உள்ளாா்.

இவரின் இளைய மகன் சுலைமான் ஷாபாஸ், குடும்பத் தொழிலைக் கவனித்து வந்தாா். பண மோசடி வழக்கில் தேடப்பட்டதையடுத்து பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com