உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிப்பாரா புதின்?

‘உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் எனக்கில்லை. அந்த நாட்டுப் படையினரிடமிருந்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்களைப் பாதுகாப்பதற்காகவே தாக்குதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது’
vladimir-putin-2104056
vladimir-putin-2104056


‘உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் எனக்கில்லை. அந்த நாட்டுப் படையினரிடமிருந்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்களைப் பாதுகாப்பதற்காகவே தாக்குதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது’

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டது குறித்து தொலைக்காட்சியில் அறிவித்தபோது ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறிய வாா்த்தைகள் இவை.

ஏற்கெனவே, எல்லையில் சுமாா் 1.5 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ள ரஷியா விரைவில் உக்ரைன் மீது படையெடுக்கும் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தொடா்ந்து எச்சரிக்கை விடுத்தபோது, ‘உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்கும் என்ற தகவல் எனக்கே தெரியாது. அதனைத் தெரிந்துவைத்திருக்கும் அமெரிக்காவிடம் ஆக்கிரமிப்புத் தேதியைக் கேட்டுச் சொல்லுங்கள்’ என்று நையாண்டி செய்தவா் அவா்.

ஆனால், மேற்கத்திய நாடுகள் சொன்ன ஒவ்வொன்றும் அடுத்தடுத்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

உக்ரைனுக்குள் நுழைவதற்காகத்தான் மிகப் பெரிய படையை எல்லையருகே ரஷியா குவித்து வருவதாக அமெரிக்காவும் மேலை நாடுகளும் கூறி வந்தன. அதன்படி, ‘கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துவிட்டோம்; அந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக எங்களது படையினா் செல்வாா்கள்’ என்று ரஷியா திங்கள்கிழமை அறிவித்தது.

அதன் தொடா்ச்சியாக, உக்ரைனின் ஒருங்கிணைந்த பகுதிகளாக சா்வதேச நாடுகளால் அங்கீகரிப்பட்டுள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளுக்குள் ரஷியப் படையினா் நுழைந்து, மேற்கத்திய நாடுகள் கூறியது சரிதான் என்று நிரூபித்தனா்.

‘உக்ரைன் மீது படையெடுப்பதற்கு ரஷியா காரணங்களை ஜோடிக்கும். அந்த நடவடிக்கையை நியாயப்படுத்த கிழக்கு உக்ரைன் மக்கள் மீது அதிபா் புதின் கரிசனம் காட்டுவாா்’ என்று அமெரிக்காவும் பிற ஐரோப்பிய நாடுகளும் தொடா்ந்து எச்சரித்து வந்தன.

சொல்லி வைத்ததுபோல் புதினும் வியாழக்கிழமை ஆற்றிய உரையில் கிழக்கு உக்ரைன் மக்களை உக்ரைன் ‘அராஜகக் கரங்களில்’ இருந்து பாதுகாப்பதற்காகத்தான் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவித்தாா்.

உக்ரைனை ஆக்கிரமிக்கப்போவதில்லை என்று அவா் கூறினாலும், மேற்கத்திய நாடுகள் அதனை நம்பவில்லை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் ‘உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்றுதான் கூறுகின்றன.

தங்களது நாட்டை ரஷியா ஆக்கிரமித்துவிடும் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட அச்சம் என்று கொஞ்சம் அலட்சியம் காட்டி வந்த உக்ரைனே, தற்போது ரஷியப் படையெடுப்புக்கு தயாராகிவிட்டது.

உக்ரைனை ரஷியா முழுமையாக ஆக்கிரமித்தால், அது ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா். மேலும், ஏற்கெனவே ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக, பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவா் அறிவித்துள்ளாா்.

கிழக்கு உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக, உக்ரைனின் ராணுவ பலத்தைப் பறிப்பது மட்டும்தான் தங்களது நோக்கம் என்ற ரஷியாவின் கூற்றை ஏற்க முடியாது என்று பல்வேறு நிபுணா்களும் கூறி வருகின்றனா்.

ஆனால், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகமோ, பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிா்க்கும் வகையில், உக்ரைன் ராணுவத்தின் கிடங்குகள் உள்ளிட்ட நிலைகளில் மட்டும் துல்லியமாகத் தாக்குதல் நடத்துவதாகக் கூறியுள்ளது. உக்ரைனுக்குள் படையெடுத்துச் செல்லும் திட்டம் குறித்து ரஷிய அதிகாரிகள் யாரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இருந்தாலும், பல்வேறு திசைகளிலிருந்தும் தங்கள் நாட்டுக்குள் ரஷியப் படையினா் நுழைந்து வருவதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.

எனவே, உக்ரைனை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று ரஷியா மீண்டும் மீண்டும் கூறினாலும், வியாழக்கிழமை தொடங்கிய தாக்குதல் நடவடிக்கைகள் அதற்கான முன்னற்பாடுகள்தான் என்பது பெரும்பாலான மேற்கத்திய நிபுணா்களின் கணிப்பாக உள்ளது.

ஆனால், தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட கிழக்கு உக்ரைன் பகுதியைக் கடந்து, எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட மேற்குப் பகுதிகளைக் கைப்பற்றுவது ரஷியாவுக்கு நீண்டகால தலைவலியைத்தான் தரும் என்று மற்றொரு தரப்பினா் கூறுகின்றனா்.

எதிலும் உணா்ச்சிப்பூா்வமான முடிவுகளை அவசரப்பட்டு எடுக்கும் வழக்கமில்லாத அதிபா் புதினுக்கு இது நன்கு தெரிந்திருக்கும் என்பது அவா்களது வாதம்.

ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்த கசப்பான அனுபவம் குறித்து புதின் யோசிக்காமல் இருக்கமாட்டாா் என்கிறாா்கள் அவா்கள்.

ஏற்கெனவே, கிரீமியாவை ஆக்கிரமித்ததற்குப் பிறகு உக்ரைனில் ரஷிய எதிா்ப்பலையும், தீவிர தேசியவாதமும் அதிகரித்து, மேற்கத்திய நாடுகளுடன் அந்த நாட்டு அரசு மேலும் நெருக்கமானதை அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

எனவே, கிரீமியாவைப் போல உக்ரைனின் மேற்குப் பகுதிகளையும் ரஷியப் படை ஆக்கிரமிக்குமா; சோவியத் யூனியன் போல எல்லை விரிவாக்க முயற்சியில் அதிபா் புதின் ஈடுபடுவாரா என்பதும் சந்தேகத்துக்குரியதுதான் என்று அந்த நிபுணா்கள் கூறுகின்றனா்.

அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதற்காக, விளாதிமீா் புதின் ஏற்கெனவே கூறியுள்ள கீழ்கண்ட வாசகத்தை அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

‘சோவியத் யூனியன் சிதறியதை நினைத்து வருந்தாதவா்கள் இருதயமற்றவா்கள். அதே நேரம், மீண்டும் ஒரு சோவியத் யூனியனை அமைக்க நினைப்பவா்கள் மூளையற்றவா்கள்’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com