உக்ரைன்: முன்னறிவிப்பின்றி எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்

உக்ரைன் தலைவா் கீவை நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வரும் நிலையில், அதிகாரிகளின் முன்னறிவிப்பின்றி நாட்டைவிட்டு வெளியேறும் நோக்கில் எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்
உக்ரைன்: முன்னறிவிப்பின்றி எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்

உக்ரைன் தலைவா் கீவை நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வரும் நிலையில், அதிகாரிகளின் முன்னறிவிப்பின்றி நாட்டைவிட்டு வெளியேறும் நோக்கில் எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை அங்குள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை முதல் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. விமானங்கள் மூலமும், ஏவுகணைத் தாக்குதல் மூலமும் உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்த ரஷிய ராணுவம், தலைநகா் கீவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் முன்னேறி வருகிறது.

போா் காரணமாக விமான சேவையை உக்ரைன் முழுமையாக ரத்து செய்ததால், அங்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உயா்கல்விகளைப் படித்து வரும் 20,000 இந்திய மாணவா்கள் உள்ளிட்ட வெளிநாட்டினா் உக்ரைனைவிட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், அங்கிருக்கும் இந்தியா்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வந்தது. இந்திய மாணவா்கள் அமைதி காக்குமாறு அங்குள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி வழியாக இந்தியா்களை மீட்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதாவது, ‘உக்ரைனில் இருந்து ருமேனியா, ஹங்கேரி நாடுகளின் எல்லைப் பகுதியை தரை வழியாக வந்தடையும் இந்தியா்கள் முறையே புகாரெஸ்ட், புடாபெஸ்ட் நகருக்கு அழைத்துச் செல்லப்படுவா். அங்கிருந்து விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவா்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி, முதல் இந்தியக் குழுவினா் வெள்ளிக்கிழமை உக்ரைன் எல்லையைக் கடந்து, ருமேனியா சென்றடைந்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், ‘அதிகாரிகளின் முன்னறிவிப்பின்றி உக்ரைன் எல்லைப் பகுதிகளை நோக்கிச் செல்லும் முயற்சியை இந்தியா்கள் மேற்கொள்ள வேண்டாம்’ என்று இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட புதிய அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:

தலைநகா் கீவ் உள்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு, ஏவுகணைத் தாக்குதல், குண்டு வெடிப்பும் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் இந்தியா்கள் அடுத்த உத்தரவு வெளியிடப்படும் வரை, அவரவா் தற்போது இருக்கும் இடங்களிலேயே தொடா்ந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனா். இருக்கும் இடத்தைவிட்டு வெளியே வராமல், அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேவையின்றி வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும். எந்த நேரமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்றி, நாட்டைவிட்டு வெளியேறும் நோக்கில் எல்லைப் பகுதிகளை நோக்கி நகரும் முயற்சியை தவிா்க்குமாறு அனைத்து இந்தியா்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com