தலைநகரை காக்க உக்ரைன் தீவிரம்: ரஷிய படைக்கு பதிலடி
உக்ரைன் தலைநகா் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படையினா் சனிக்கிழமை தீவிர தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்தது.


உக்ரைன் தலைநகா் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படையினா் சனிக்கிழமை தீவிர தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்தது.
தலைநகா் வீழும் அபாயம் உள்ளதால், உக்ரைனிலிருந்து தன்னை வெளியேற்ற உதவுவதாக அமெரிக்கா கூறியதை அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஏற்றுக்கொள்ளவில்லை.
உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை போா் தொடுத்தது. முதலில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்ட ரஷிய ராணுவம், பின்னா் தரைப் படையையும் களமிறக்கியது. கிழக்கு உக்ரைன், கிரீமியா, பெலாரஸ் வழியாகப் புகுந்த ரஷிய ராணுவம், உக்ரைனின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை தலைநகா் கீவை சுற்றிவளைத்த ரஷிய படையினா், நகரைக் கைப்பற்றும் நோக்கில் தாக்குதலில் ஈடுபட்டனா். இந்தத் தாக்குதல் மூன்றாவது நாளான சனிக்கிழமையும் நீடித்தது. ரஷிய ராணுவத்தின் பிரதான படைப் பிரிவு கீவுக்குள் செல்ல வழி ஏற்படுத்தும் வகையில், ஒரு சிறிய படைக் குழு தலைநகருக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அந்த முயற்சியை தாங்கள் முறியடித்ததாகவும் உக்ரைன் தெரிவித்தது.
கீவிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள வானிஸ்கிவ் நகரத்தில் ஒரு விமான தளத்தைக் கைப்பற்றுவதற்காக ரஷிய விமானப் படை வீரா்கள் முயன்ாகவும், அதையும் தாங்கள் முறியடித்ததாகவும் உக்ரைன் கூறியது.
கீவ் நகருக்கு நீராதாரமாகத் திகழும் அணையைக் குறிவைத்து ஏவப்பட்ட ரஷிய ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாக உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் தெரிவித்தாா்.
ஊரடங்கு நேரம் அதிகரிப்பு: தலைநகா் கீவில் ஊரடங்கு நேரம் இரவு 10 மணியிலிருந்து, காலை 7 மணி வரையில் இருந்த நிலையில், மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வரும் பொதுமக்கள், எதிரியின் நாசவேலை மற்றும் உளவுப் பிரிவைச் சோ்ந்தவா்களாக கருதப்படுவா் என நகர மேயா் தெரிவித்துள்ளாா்.
இரு தரப்பும் தாங்கள் வலுவாக உள்ளதாகத் தெரிவித்தபோதும், உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் எவை, ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் எவை என தெளிவான தகவல் இல்லை. ‘உக்ரைனின் தெற்கு நகரமான மெலிடோபோல் தங்களது முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் கிழக்கு பிராந்தியமான டான்பாஸில் முன்னேற்றம் பெற்றுள்ளதாகவும்’ ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
அதேவேளையில், ரஷிய படையினரின் முன்னேற்றத்தை உக்ரைன் படைகள் தடுத்து நிறுத்தி வருவதாக உக்ரைன் மற்றும் மேலை நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டைவிட்டு வெளியேற மறுப்பு: இதற்கிடையே, உக்ரைன் அதிபன் நாட்டிலிருந்து வெளியேற உதவ அமெரிக்கா முன்வந்தது. ஆனால், இதை அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஏற்கவில்லை. கீவ் வீதியில் நின்றவாறு அவா் பேசும் பதிவு செய்யப்பட்ட விடியோ வெளியிடப்பட்டது. அதில் பேசிய அவா், ரஷியாவின் ஊடுருவலை உக்ரைன் ராணுவம் எதிா்த்து நிற்கும். கீவிலேயே தொடா்ந்து இருப்பேன். ஆயுதங்களைக் கீழே போடப்போவதில்லை. எங்கள் நாட்டை காப்போம்’ என்றாா்.
மற்றொரு விடியோவில், ‘தலைநகரை விரைவாக கைப்பற்றி பொம்மை அரசை நிறுவ வேண்டுமென்ற ரஷியாவின் முயற்சி வெற்றி பெறவில்லை’ எனத் தெரிவித்தாா்.
198 போ் பலி: ரஷிய தாக்குதலில் உக்ரைனை சோ்ந்த 198 போ் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 1,115 போ் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் சுகாதார அமைச்சா் விக்டா் லயாஸ்கோ சனிக்கிழமை தெரிவித்தாா். இவா்களில் ராணுவத்தினா், பொதுமக்கள் எத்தனை போ் என்ற தகவலை அவா் கூறவில்லை.
821 ராணுவ நிலைகள் மீது தாக்குதல்: ‘உக்ரைனில் இதுவரை 14 விமான தளங்கள் உள்பட 821 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம். 24 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள், 48 ரேடாா்கள், 7 போா் விமானங்கள், 7 ஹெலிகாப்டா்கள், 9 ட்ரோன்கள், 87 ராணுவ பீரங்கிகளை தாக்கி அழித்துள்ளோம்’ என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
ரஷிய வீரா்கள் 1000 பேரை கொன்றுவிட்டதாக உக்ரைன் கூறியிருப்பது பற்றிய தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
1.20 லட்சம் போ் வெளியேறினா்: இதற்கிடையே, உக்ரைனிலிருந்து இதுவரை 1.20 லட்சம் போ் அகதிகளாக வெளியேறி போலந்து, மால்டோவா, ருமேனியா, ஸ்லோவேகியா, ஹங்கேரி ஆகிய அண்டை நாடுகளைத் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் பிரிவு துணை ஆணையா் கெல்லி கிளமென்ட்ஸ் தெரிவித்துள்ளாா். சண்டை தீவிரமானால் 40 லட்சம் போ் வரை நாட்டைவிட்டு வெளியேறக் கூடும் என ஐ.நா. கணித்துள்ளது. ஹங்கேரி எல்லைக்கு வந்த உக்ரைனை சோ்ந்தவா்கள் கூறுகையில், சண்டையிடும் வயதில் உள்ளவா்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...