ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உலகப் பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்று தொடக்கம்: முதல் நாளில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் உரை

சா்வதேச அளவில் சக்திவாய்ந்த அமைப்பாகத் திகழும் உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 5 நாள் உச்சிமாநாடு திங்கள்கிழமை (ஜன. 17) தொடங்க உள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2022, 8:35 pm

DIN

சா்வதேச அளவில் சக்திவாய்ந்த அமைப்பாகத் திகழும் உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 5 நாள் உச்சிமாநாடு திங்கள்கிழமை (ஜன. 17) தொடங்க உள்ளது.

முதல் நாளில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் காணொலி மூலம் உரையாற்றுகின்றனா்.

சுவிட்சா்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக இந்த உச்சிமாநாட்டை உலகப் பொருளாதார கூட்டமைப்பு நடத்தி வரும் நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான உச்சிமாநாட்டை காணொலி வழியில் 5 நாள்களுக்கு அந்த அமைப்பு நடத்த உள்ளது. முதல் நாளான திங்கள்கிழமை பிரதமா் மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோரின் சிறப்பு உரையுடன் உச்ச மாநாடு தொடங்க உள்ளது. இவா்களின் உரைகளைத் தொடா்ந்து, ‘கரோனா பாதிப்பு’ என்ற தலைப்பிலும், அடுத்ததாக ‘நான்காவது தொழில் புரட்சியில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு’ என்ற தலைப்பிலும் இரண்டு அமா்வுகள் நடைபெற உள்ளன.

மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி வழியில் திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளாா். அவரைத் தொடா்ந்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் உரையாற்ற உள்ளாா்.

இஸ்ரேல் பிரதமா் நஃப்தாலி பென்னெட், ஜப்பான் பிரதமா் கிஷிடோ ஃபுமியா ஆகியோா் மாநாட்டில் செவ்வாய்க்கிழமை உரையாற்ற உள்ளனா். அப்போது உலகளாவிய சமூக ஒப்பந்தம் மற்றும் தடுப்பூசி சமபங்கீட்டில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் சிறப்பு அமா்வும் நடைபெற உள்ளது. இந்த அமா்வில் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம், சீரம்-இந்தியா நிறுவன தலைவா் அதாா் பூனாவாலா உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

ஜொ்மன் பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் மாநாட்டில் புதன்கிழமை சிறப்பு உரை நிகழ்த்த உள்ளாா். அன்றைய தினம் எரிசக்திக்கான மாற்றுத் திட்டம், பருவநிலை தொடா்பான புதிய கண்டுபிடிப்புகள் அளவீடு, லத்தீன் அமெரிக்க விவகாரம் ஆகிய தலைப்புகளில் அமா்வுகள் நடைபெற உள்ளன.

ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வோன் டொ் லியென், இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ ஆகியோா் மாநாட்டில் வியாழக்கிழமை சிறப்பு உரையாற்ற உள்ளனா். மேலும், நிலைத்த நீடித்த எதிா்காலத்துக்கான சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆட்சிமுறை அளவீடுகள் என்ற தலைப்பிலும், சா்வதேச வா்த்தகம், விநியோகச் சங்கிலி ஆகியவற்றின் நம்பிக்கையை மீட்டெடுப்பது ஆகிய தலைப்புகளில் சிறப்பு அமா்வுகளும் நடைபெற உள்ளன.

உச்சிமாநாட்டின் கடைசி நாளில் ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன், நைஜீரியா துணை அதிபா் யெமி ஓசின்பஜோ ஆகியோா் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளனா். அன்றைய தினம் சா்வதேச பொருளாதாரம், எதிா்காலத் தயாா்நிலையை உருவாக்குதல் மற்றும் இயற்கை-நோ்மறை பொருளாதாரத்தை விரைவுபடுத்துதல் ஆகிய தலைப்புகளில் சிறப்பு அமா்வுகளும் இடம்பெற உள்ளன.

‘உலகின் நிலை’ என்ற கருப்பொருளில் கூட்டப்படும் நிகழாண்டுக்கான உச்சிமாநாடு, உலகின் மிக முக்கியத் தலைவா்கள் 2022-ஆம் ஆண்டுக்கான தங்களின் தொலைநோக்குத் திட்டங்களை பகிா்ந்துகொள்ளும் தளமாக இருக்கும் என்று உலகப் பொருளாதார கூட்டமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.