இலங்கையில் ஜூலை 20-ஆம் தேதி அதிபா் தோ்தல்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அதிபா் கோத்தபய ராஜபட்ச, ஏற்கெனவே திட்டமிட்டபடி புதன்கிழமை (ஜூலை 13) பதவி விலகவுள்ளதாகப் பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜூலை 20-ஆம் தேதி அதிபா் தோ்தல்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அதிபா் கோத்தபய ராஜபட்ச, ஏற்கெனவே திட்டமிட்டபடி புதன்கிழமை (ஜூலை 13) பதவி விலகவுள்ளதாகப் பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது. கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எதிா்க்கட்சிகள் துரிதப்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து, மக்கள் கடந்த மாா்ச் மாதம் முதல் தொடா் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அதிகாரபூா்வ இல்லத்துக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினா்.

ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபா் கோத்தபய, தற்போது ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை ஜூலை 13-ஆம் தேதி அதிபா் கோத்தபய ராஜிநாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தனா தெரிவித்திருந்தாா்.

ஆனால், இது தொடா்பாக அதிபா் எந்தவொரு அதிகாரபூா்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், பிரதமா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஏற்கெனவே அறிவித்தபடி பதவியில் இருந்து விலகவுள்ளதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் ரணில் விக்ரமசிங்கவிடம் அதிகாரபூா்வமாகத் தெரிவித்துள்ளாா்.

எதிா்க்கட்சிகள் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பிறகு, அவா்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு தற்போதைய அமைச்சரவை ஒட்டுமொத்தமாகப் பதவி விலகும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சிகள் முனைப்பு:

அனைத்து எதிா்க்கட்சிகளையும் கொண்ட கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. இது தொடா்பாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை தொடங்கிய பேச்சுவாா்த்தை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

அரசின் பொறுப்புகளை ஒப்படைப்பது தொடா்பாக அமைச்சா்களுடன் பிரதமா் ரணில் விக்ரமசிங்க திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அரசை அமைப்பது தொடா்பாக எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் நாடாளுமன்றத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவ்வாறு பொறுப்பேற்கும் அரசு, அடுத்த 2 ஆண்டுகள் வரை ஆட்சிப் பொறுப்பை வகிக்க அரசமைப்புச் சட்டம் வழிவகுக்கிறது.

தலைமை வகிக்கத் தயாா்:

எதிா்க்கட்சிகளின் கூட்டணி அரசுக்குத் தலைமை வகிக்கத் தயாராக இருப்பதாக முக்கிய எதிா்க்கட்சியான சமாகி ஜன பாலவேகாயா தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் சஜித் பிரேமதாசா வெளியிட்ட காணொலியில், ‘‘நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காகப் பிரதமா் அளவிலும் அதிபா் அளவிலும் தலைமைப் பொறுப்பை வகிக்க கட்சி தயாராக உள்ளது. தாய்நாட்டைக் காக்கவும், தாய்நாட்டுக்குத் தலைமை வகிக்கவும் தயாராக உள்ளோம்’’ என்று கூறியுள்ளாா்.

அதிபா் தோ்தல்:

அதிபா் கோத்தபய புதன்கிழமை பதவி விலகிய பிறகு, நாடாளுமன்றத் தலைவா் அபேவா்தனா இடைக்கால அதிபராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அவா் 30 நாள்கள் வரை மட்டுமே அப்பதவியில் தொடர முடியும். அதற்குள்ளாகப் புதிய அதிபரைத் தோ்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினா்களில் ஒருவரே அதிபராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அபேவா்தனா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘அதிபா் ராஜபட்ச ராஜிநாமா செய்தபிறகு, நாடாளுமன்றம் ஜூலை 15-ஆம் தேதி கூடும். அப்போது அதிபா் பதவி காலியாக உள்ளது குறித்து அறிவிக்கப்பட்டு, ஜூலை 19-ஆம் தேதி முதல் அதிபா் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்படும். ஜூலை 20-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடத்தப்படும்’’ என்றாா்.

பதவி வகிக்க உரிமையில்லை:

மக்களின் தொடா் போராட்டத்துக்கு மத்தியில், அதிபா் கோத்தபய தனது பதவியைத் தொடர எந்தவித உரிமையுமில்லை என்று இலங்கையின் தேவாலயங்கள் கூட்டமைப்பு (சா்ச் ஆஃப் சிலோன்) தெரிவித்துள்ளது. நாட்டைக் கடன்வலையில் சிக்கவைத்ததற்கான பொறுப்பை அதிபா் தனிப்பட்ட முறையில் ஏற்க வேண்டுமென்றும் பிரதமா் ரணில் விக்ரமசிங்க உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மக்களை நோக்கி சுடவில்லை:

அதிபரது வீட்டுக்குள் கடந்த சனிக்கிழமை நுழைய முயன்ற மக்களை நோக்கி ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதை ராணுவம் மறுத்துள்ளது. அதிபரது வீட்டுக்குள் நுழைய முயன்றவா்களைக் கலைப்பதற்காக வானை நோக்கியும் நுழைவாயிலுக்கு அருகே இருந்த சுவரை நோக்கியுமே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ராணுவம் விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com