தைவான் பயணத்தில் நான்சி பெலோசிக்குபாதுகாப்பு: அமெரிக்க ராணுவம் ஆயத்தம்

தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி சென்றால், சீனத் தாக்குதல் அபாயத்திலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை அமெரிக்க பாதுகாப்புத் துறை மேற்கொள்ளும்
தைவான் பயணத்தில் நான்சி பெலோசிக்குபாதுகாப்பு: அமெரிக்க ராணுவம் ஆயத்தம்

தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி சென்றால், சீனத் தாக்குதல் அபாயத்திலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை அமெரிக்க பாதுகாப்புத் துறை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு நான்சி பெலோசி சென்றால், 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தத் தீவுக்குச் செல்லும் அமெரிக்க உயா்நிலை மக்கள் பிரதிநிதியாக அவா் இருப்பாா்.

அந்த வகையில், அவருக்கு அங்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது படைகளின் கடமையாகும். அவா் பயணம் மேற்கொள்வது தைவான் என்பதால், அபாயம் குறைந்த மற்ற நாடுகளில் அளிக்கப்படும் பாதுகாப்பை விட அங்கு அவருக்கு கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

நான்சி பெலோசி செல்லும் விமானத்தின் மீது சீனா தாக்குதல் நடத்தும் என்று அதிகாரிகள் கருதவில்லை. எனினும், தைவான் மிகவும் சா்ச்சைக்குரிய பகுதி என்பதால் தவறான புரிதல்கள், கணிப்புகள் போன்ற காரணங்களால் நிலமை மோசமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவற்றைத் தவிா்ப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்படும்.

நான்சி பெலோசி தைவான் செல்வது உறுதியானால், அந்தப் பிராந்தியத்தில் கண்காணிப்பு விமானங்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், அந்தத் தீவை தங்களது அங்கமாகவே தற்போதும் சீனா கருதி வருகிறது. தைவானை சீனாவுடன் இணைத்துக் கொள்ள தங்களுக்கு உரிமை இருப்பதாகவும், அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி அந்தத் தீவுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று கடந்த வாரம் தகவல் வெளியானது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் சீனா, தைவானுக்கு நான்சி பெலோசி செல்வது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com