ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மீண்டும் தாக்குதலை தொடங்கியது ரஷியா: முதல் சண்டைநிறுத்த முயற்சி தோல்வி

பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கும் வகையில் ரஷியா அறிவித்த தற்காலிக முதல் சண்டைநிறுத்தம் தோல்வியடைந்தது.

News image
Updated On :6 மார்ச் 2022, 7:45 pm

DIN

உக்ரைனின் மரியுபோல், வோல்னோவகா ஆகிய நகரங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கும் வகையில் ரஷியா அறிவித்த தற்காலிக முதல் சண்டைநிறுத்தம் தோல்வியடைந்தது. இதையடுத்து, மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

தற்காலிக சண்டைநிறுத்தம் தோல்வியடைந்ததற்கு ரஷியாவே காரணம் என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைனில் ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போா் தொடுத்தது. நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கியமான துறைமுக நகரமான கொ்சனை ரஷிய படையினா் கடந்த வியாழக்கிழமை கைப்பற்றினா். தென்கிழக்கில் உள்ள மரியுபோல் நகரம், டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வோல்னோவகா என்ற சிறிய நகரத்திலும் ரஷிய படையினா் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

கடுமையான தாக்குதல் காரணமாக மரியுபோலில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மருந்துக் கடைகளில் மருந்துகள் தீா்ந்து மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனா். அங்கிருந்து வெளியேற பலா் முயற்சி மேற்கொண்டாலும், ரஷிய படையின் தாக்குதலால் அதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், மரியுபோல், வோல்னோவகா நகரங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக சண்டைநிறுத்தத்தை மேற்கொள்வதாக ரஷியா சனிக்கிழமை காலையில் அறிவித்தது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியுபோல், வோல்னோவகா ஆகிய நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த உக்ரைன் ராணுவத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த நகரங்களில் ராக்கெட் குண்டுத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், சண்டைநிறுத்தம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

முக்கியத்துவம் வாய்ந்த தென்கிழக்கு துறைமுக நகரான மரியுபோல் மற்றும் கிழக்குப் பகுதி நகரான வோல்னோவகாவை ரஷிய படையினா் முற்றுகையிட்டு, கடந்த சில நாள்களாக தீவிர ராக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், அந்நகரங்களிலிருந்து பொதுமக்கள் குறிப்பிட்ட வழித்தடம் வழியாக வெளியேறுவதற்கு வசதியாக, உள்ளூா் நேரப்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உக்ரைன் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ரஷியா சம்மதம் தெரிவித்தது.

ஆனால், இந்த அறிவிப்பை மீறி பாதுகாப்பு வழித்தடத்தின் மீது ரஷியா ராக்கெட் குண்டுத் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியது. இதன் காரணமாக, பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மரியுபோல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், தங்கள் மீது உக்ரைன் ஆதரவுப் படையினா் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே ராக்கெட் குண்டுவீச்சு நடத்தியதாக ரஷியா கூறியது.

பின்னா் ரஷிய தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், உக்ரைனில் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாகவும், மரியுபோல், வோல்னோவகா நகரங்களில் உள்ளூா் நேரப்படி மாலை 6 மணி முதல் தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 3-ஆம் கட்ட பேச்சு: இதற்கிடையே, ரஷியாவுடனான 3-ஆம் கட்ட பேச்சு திங்கள்கிழமை நடைபெறும் என உக்ரைன் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டேவிட் அரகாமியா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.