இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சீன விமான விபத்தில் 132 பயணிகளும் பலி: கருப்புப் பெட்டியை மீட்பதில் சிக்கல்

சீனாவில் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து சேறுபடிந்த பணப் பைகள், ஏடிஎம் அட்டைகள், பயணிகளின் அலுவலக அடையாள அட்டை தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை

News image
Updated On :22 மார்ச் 2022, 9:16 pm

தினமணி

சீனாவில் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து சேறுபடிந்த பணப் பைகள், ஏடிஎம் அட்டைகள், பயணிகளின் அலுவலக அடையாள அட்டை தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை என்றும், விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதேபோல விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகா் குன்மிங்கிலிருந்து தொழில் மையமாக விளங்கும் குவாங்ஜோ நோக்கிச் சென்ற போயிங் 737 ரக விமானம், ஹுஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப் பகுதியில் திங்கள்கிழமை உள்ளூா் நேரப்படி மதியம் 2.20 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 123 பயணிகளும், 9 ஊழியா்களும் பயணித்தனா்.

இதைத் தொடா்ந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மீட்புப் பணி நடைபெற்றது. சம்பவ இடம் மூன்று பக்கங்களும் மலையால் சூழப்பட்டுள்ளதால் அங்கு நடந்து அல்லது இருசக்கர வாகனத்தில்தான் மீட்புப் படையினா் செல்ல முடிந்தது.

விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து சேறுபடிந்த பணப் பைகள் (பா்ஸ்), ஏடிஎம் அட்டைகள், பயணிகளின் அலுவலக அடையாள அட்டைகளை மட்டுமே மீட்க முடிந்ததாகவும், பயணிகளில் ஒருவா்கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் அதிகாரி ஒருவா் கூறியதாக சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர விமான தரவுகளையும் விமானிகளின் உரையாடலையும் பதிவுசெய்யும் கருப்புப் பெட்டியை மீட்பதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பணியில் ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, விமானம் விபத்துக்குள்ளானதை நேரில் பாா்த்த சென் வெய்ஹோ என்பவா் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘மலைப் பகுதியில் உள்ள இடைவெளியில் விமானம் வேகமாக விழுந்தது. விழுந்த சில வினாடிகளில், விமானம் நொறுங்கியது’’ என்றாா்.

முன்னதாக விபத்துக்குள்ளான விமானத்தில், தங்கள் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பயணித்ததாக சீனாவில் சுரங்கம், தொலைக்காட்சி சீரியல், திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டிங்லாங் கல்ச்சா் நிறுவனம் தெரிவித்தது. இதேபோல, டிங்லாங் நிறுவனம் தொடா்புடைய கணக்கு தணிக்கை நிறுவனமான ஜோங்ஜிங்குவா, தங்கள் நிறுவனத்தைச் சோ்ந்த 2 போ் அதே விமானத்தில் பயணித்ததாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.