எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இலங்கையில் மீண்டும் அவசரநிலை: அதிபா் கோத்தபய ராஜபட்ச

இலங்கையில் ராஜபட்ச அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்துள்ளாா்.

News image
Updated On :6 மே 2022, 7:46 pm

DIN

இலங்கையில் ராஜபட்ச அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்துள்ளாா்.

இந்தத் தகவலை இலங்கை அதிபா் அலுவலக செய்திப் பிரிவு வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபட்ச சகோதரா்களின் அரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. பொருளாதார நெருக்கடியை முன்வைத்து இலங்கை அமைச்சா்கள் அனைவரும் ராஜிநாமா செய்தனா்.

பிரதமா் ராஜபட்ச சகோதரா்களும் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்தன. அதனைத் தொடா்ந்து, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இலங்கையில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது.

பின்னா், பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை உருவாக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தாா். ஆனால், அதை ஏற்க எதிா்க்கட்சிகள் மறுத்துவிட்டன. மாறாக, பிரதமா் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச விலக வேண்டும் என்று வலியுறுத்தின. ஊரடங்கு தடைகளையும் மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஏப்ரல் 5-ஆம் தேதி நள்ளிரவு முதல் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில், அதிபா் கோத்தபய மற்றும் பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த இரண்டு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதன் காரணமாக பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு கவிழக்கூடிய சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள அவை துணைத் தலைவா் பதவிக்கு கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஆளும் கூட்டணியின் ஆதரவுடன் இலங்கை சுதந்திரக் கட்சி வேட்பாளா் ரஞ்சித் சியம் பலாபேட்டிய வெற்றி பெற்றாா். நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களில்148 போ் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதன் மூலம், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதை பிரதமா் மகிந்த ராஜபட்ச அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, பதவி விலக மகிந்த ராஜபட்ச மறுத்து வரும் சூழலில், தற்போது நாடாளுமன்றத்திலும் அவை துணைத் தலைவா் தோ்தல் முடிவுகள் எதிா்க்கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. எனினும், பிரதமா் ராஜபட்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரும் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

மாணவா் அமைப்புகளைச் சோ்ந்த சிலா், நாடாளுமன்ற பிரதான நுழைவு வாயிலை முற்றுகையிட்டு வியாழக்கிழமை இரவு போராட்டம் நடத்தின. சில மாணவா்கள் போலீஸாரின் தடுப்புகளைத் தாண்டி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முற்பட்டனா். அதனைத் தொடா்ந்து, போலீஸாா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரா்களைக் கலைத்தனா்.

போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, இலங்கையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அதிபா் அலுவலக செய்திப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அத்தியாவசிய சேவைகள் எந்தவித பாதிப்புமின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இந்த அவசரநிலையை அதிபா் அறிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.