26,000 ஆண்டுகள் இல்லாத அளவில் கடலில் அமிலத்தன்மை: எச்சரிக்கும் ஐநா

26,000 ஆண்டுகள் இல்லாத அளவில் கடலில் அமிலத்தன்மை: எச்சரிக்கும் ஐநா

வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் வெப்பநிலை உயர்வு காரணமாக கடல்நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக காலநிலை மாற்றம் குறித்து ஐநா எச்சரித்துள்ளது.
Published on

வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் வெப்பநிலை உயர்வு காரணமாக கடல்நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக காலநிலை மாற்றம் குறித்து ஐநா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் பன்னாட்டு காலநிலை அமைப்பு 2021ஆம் ஆண்டின் உலகளாவிய காலநிலை குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் புவியின் மீதான மனிதர்களின் தலையீடு நீண்ட கால பாதிப்பிற்கு வித்திட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதீத காலநிலை மாற்றம் தினசரி பேரிடர்களை ஏற்படுத்துவதுடன் மனித வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தின் மீது பெரும் சேதத்தையும் ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 7 ஆண்டுகளின் உலகளாவிய சராசரி வெப்பநிலையானது இதுவரை இல்லாத அளவு பதிவாகியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஐநா இது உணவு தானியங்களின் உற்பத்தியை பாதித்துள்ளதாகவும், அதன்காரணமாக அவற்றின் விலை உயர்வு புதிய உச்சத்தை அடைவதாகவும் தெரிவித்துள்ளது.

உலக கடற்பரப்பு 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக வெப்ப அலைகளை உள்வாங்கிக் கொண்டதாக தரவுகள் தெரிவிக்கும் நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வெப்பநிலையை கடற்பரப்பு அடைந்து வருவதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 

இந்த அதீத வெப்பநிலை உயர்வு கடல்வாழ் உயிரினங்களை பாதித்து வருவதாகவும், 26,000 ஆண்டுகள் இல்லாத அளவு அமிலத் தன்மையுடன் கடல் மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பேசிய ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டேரஸ், “காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் ஏற்பட்டுள்ள மனித இனத்தின் தோல்வியை இந்த அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. புதைபடிம எரிபொருள்களின் பயன்பாடு பொருளாதார ரீதியிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் நம் கண்முன் உள்ள ஒரே ஒரு வாய்ப்பு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதே. அனைவரும் இணைந்து செயல்பட்டால் 21ஆம் நூற்றாண்டை புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நூற்றாண்டாக மாற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com