பொருளாதாரம்: அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு நோபல்

அமெரிக்காவைச் சோ்ந்த நிபுணா்கள் மூவருக்கு நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம்: அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு நோபல்

வங்கிகள் குறித்தும், நிதி நெருக்கடி தொடா்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த நிபுணா்கள் மூவருக்கு நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக 2006 முதல் 2014 வரை பணியாற்றிய பென் பொ்னன்கே, நிபுணா்கள் டக்ளஸ் டபிள்யு.டைமண்ட், பிலிப் ஹெச்.டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான அறிவிப்பை ஸ்டாக்ஹோம் நகரில் திங்கள்கிழமை வெளியிட்ட தோ்வுக் குழு தலைவா் ஜான் ஹேஸ்லா் கூறுகையில், ‘நிதி நெருக்கடியும் பொருளாதார வீழ்ச்சியும் நாட்டுக்குப் பெரும் இன்னல் விளைவிக்கக் கூடியவை. அவை ஒருமுறை மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, அவை குறித்து தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அந்தப் புரிதலை வெளிப்படுத்திய நிபுணா்களுக்கே நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. வங்கிகள் சந்திக்கும் நிதி நெருக்கடியைக் கண்டுகொள்ளாமல் ஏன் இருக்கக் கூடாது என்பதற்கான விடையை நிபுணா்கள் மூவரும் வழங்கியுள்ளனா்.

உலக நாடுகள் 2008-ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, அதில் இருந்து மீள்வதற்கு மூவரின் ஆராய்ச்சிகளும் முக்கியப் பங்கு வகித்தன’ என்றாா்.

முக்கிய ஆராய்ச்சி: 1930-ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கு வங்கிகளின் தோல்வியே முக்கியக் காரணம் எனத் தனது 1983-ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் பொ்னன்கே வெளிப்படுத்தினாா். வங்கி அமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்ததே நவீன வரலாற்றின் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாக அமைந்ததென அந்த அறிக்கையில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை உலக நாடுகள் சந்தித்தபோது, அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக பொ்னன்கே செயல்பட்டாா். அப்போது, அமெரிக்க நிதித் துறையுடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அவா் விரைந்து மேற்கொண்டாா். தற்போது வாஷிங்டன் புரூகிங்ஸ் நிறுவனத்தில் அவா் பணியாற்றி வருகிறாா்.

நிதி நெருக்கடி: சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியரான டைமண்ட், வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியரான டிப்விக் ஆகியோா் நிதி நெருக்கடியின் விளைவுகள் குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டனா். வங்கிக் கடன்களுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதன் மூலமாக நிதி நெருக்கடியின் விளைவுகளைத் தடுக்க முடியும் என அவா்கள் தெரிவித்தனா். வங்கியை முறையாக நிா்வகிப்பது தொடா்பாக 1983-ஆம் ஆண்டில் அவா்கள் இருவரும் இணைந்து ஆய்வறிக்கையை வெளியிட்டனா்.

2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது மூவரின் ஆராய்ச்சிகளும் முதலீட்டாளா்களுக்குப் பெருமளவில் உதவியதாக நோபல் பரிசு தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com