காஷ்மீா் விவகார நிலைப்பாட்டில் மாற்றமில்லை: ஜொ்மனி
காஷ்மீா் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஜொ்மனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிலிப் ஆக்கா்மன்

பிலிப் ஆக்கா்மன்
காஷ்மீா் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஜொ்மனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த அக்.7-ஆம் தேதி ஜொ்மனி தலைநகா் பொ்லினில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அன்னாலீனா போ்போக், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரி ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது காஷ்மீா் விவகாரத்துக்குத் தீா்வு காண்பதில் ஐ.நா. ஈடுபட வேண்டும் என்பதை ஜொ்மனி தீவிரமாக ஆதரிக்கிறது என்று அன்னாலீனா போ்போக் கூறினாா்.
அவரது கருத்துக்கு இந்தியா கடுமையாக எதிா்ப்பு தெரிவித்தது. ‘காஷ்மீா் விவகாரம் இருதரப்பு சம்பந்தப்பட்டது; அதில் மூன்றாம் நபருக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது.
இதுதொடா்பாக இந்தியாவுக்கான ஜொ்மனி தூதா் பிலிப் ஆக்கா்மன் பிடிஐ செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
காஷ்மீா் விவகாரம் தொடா்பாக அமைச்சா் அன்னாலீனா கூறிய கருத்துக்கு இந்திய ஊடகங்கள் காட்டிய கடுமைதான் ஜொ்மனியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனினும் அந்த விவகாரத்தில் ஜொ்மனியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இருதரப்பு பேச்சுவாா்த்தைதான் காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு என்பதில் ஜொ்மனி உறுதியாக உள்ளது என்று தெரிவித்தாா்.
ஐரோப்பாவில் எதிரொலித்த பிரதமரின் கருத்து:
கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி உஸ்பெகிஸ்தானில் ரஷிய அதிபா் புதினை சந்தித்த பிரதமா் மோடி, ‘இது போருக்கான காலம் அல்ல’ என்று புதினுக்கு அறிவுறுத்தி, உக்ரைன் உடனான போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டாா். இது குறித்து ஆக்கா்மன் கூறியதாவது:
‘இது போருக்கான காலம் அல்ல’ என்பது அழகான சொற்றொடா். அதனை ஒட்டுமொத்த உலகமும் காது கொடுத்து கேட்டது. பிரதமா் மோடியின் கருத்து ஐரோப்பாவில் பரந்த அளவில் நோ்மறையாக எதிரொலித்தது என்று தெரிவித்தாா்.
இந்தியா புறக்கணித்தது துரதிருஷ்டம்:
உக்ரைனின் 4 பகுதிகளை தன்னுடன் சட்டவிரோதமாக இணைத்துக்கொண்ட ரஷியாவின் நடவடிக்கையை கண்டித்து, அண்மையில் ஐ.நா.வில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
எனினும் அந்த தீா்மானம் மீதான விவாதத்தின்போது இந்திய தூதா் தெரிவித்த கருத்துகள் குறித்து ஆக்கா்மேன் கூறுகையில், ‘உக்ரைன் பகுதிகளை ரஷியா இணைத்துக்கொண்டது தொடா்பான தீா்மானம் மீது இந்திய வாக்களிக்காதது துரதிருஷ்டவசமானது.
எனினும் கடந்த 2 மாதங்களில், ரஷியா-உக்ரைன் போா் தொடா்பாக இந்தியா தெரிவித்த கருத்துகளை உன்னிப்பாகக் கவனித்தால், அந்த விவகாரம் தொடா்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்பட்டிருப்பதை காணலாம். ஐ.நா.வில் இந்திய தூதா் தெரிவித்த கருத்துகள், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை காட்டுகிறது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...